தியானம் (சித்திரை 25, 2025)
காரியத்தின் கருப்பொருள்
யோவான் 16:13
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்
'ஆடுகளை ஓநாய்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்: ஆகையால், சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களாயும், புறாக்களைப்போல கபடற்றவர்களாயுமிருங்கள்' (மத்தேயு 10:16) என்று ஆண்டவராகிய இயேசு தாமே, தம்முடைய பன்னிரு சீஷர்களை திருப்பணிக்காக அனுப்பும் போது அவர்களுக்கு கூறியிருக்கின்றார். உதவித்திட்டங்களை குறித்து பேசும் போது, சிலர் எப்போதும், எல்லாவற்றிலும், யாவற்றைக் குறித்தும் ஒயாத வினாவுள்ளவர்களாக இருந்து விடுகின்றார்கள். இன்னும் சிலரோ, அன்பு சகல பாவங்களையும் மூடும் என்று கூறி, எப்போதும், எல்லாவற்றிலும், யாவற்றையும் பரிசுத்தமென்று எண்ணிக் கொள்கின்றார்கள். எப்போதும் சர்ப்பத்தை போல வினாவுள்ளவர்கள், முடிவிலே தங்கள் இருதயங்களை கடினப்படுத்தி, எல்லோரையும் தவறான முறையிலே கண்டு கொள்கின்றார்கள். எப் போதும் புறாக்களைப் போல கபடற்றவர்கள் என்று தங்களை எண்ணிக் கொள்கின்றவர்கள், ஏமாற்றத்தின்மேல் ஏமாற்றமடையும் போது, சோர்ந்து, பின்வாங்கி, மனஅழுத்தங்களுக்குள்ளாகி, தேவகாரியங்களை யும், ஊழியர்களையும், விசுவாசிகளையும் குறித்து மிகவும் கசப்புள்ளவர்களாக மாறிவிடுகின்றார்கள். பிரதானமாக இவ்விடத்திலே நாம் கவனிக்க வேண்டிய காரியமாவது, நான் மட்டும் நீதியுள்ளவன், நியாயம் எனக்கு மட்டும்தான் தெரியும், மிகுதியாக இருக்கும் யாவரும் ஓநாய்களைப் போல ஏமாற்றுகின்றவர்கள் என்று எண்ணம் ஒருவனிடம் இருந்தால், அவன் தன் இருதயத்தை தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்த்து, தேவ சமுகத்திலே தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். 'சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும்', 'புறாக்களைப் போல கபடற்றவர்களும்' என்ற இரண்டு காரியங்களையும் விசுவாசிகள் தங்களுடைய மாம்ச பெலத்தினாலேயோ அல்லது இந்த உலக ஞானத் தினாலேயோ சரியான முறையிலே நிறைவேற்றி முடிக்க முடியாது. சத்திய ஆவியானவரே தம்முக்கு கீழ்படிந்து, தமது தேவவார்த்தையின்படி நடக்க தங்களை ஒப்புக் கொடுக்கின்றவர்களை சகல சத்தியத்திலும் நடத்திச் செல்கின்றார். பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி முடிப்பதே காரியத்தின் கடத்தொiயாக இருக்க வேண் டும். எனவே, உதவிகளை செய்கின்றவர்கள் தேவ ஆவியானவரின் வழிநடத்துதலோடு அதை செய்யுங்கள்.
ஜெபம்:
பரம ஞானத்தை கொடுத்து உம்முடையவர்களை வழிநடத்தும் தேவனே, உம்முடைய வார்த்தைகளின் கருப்பொருளை அறிந்து காரியங்களை நடத்தும்படிக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 119:105