தியானம் (சித்திரை 18, 2025)
கிறிஸ்துவின் சாயலிலே வளருங்கள்
மத்தேயு 5:39
ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
தீமையான ஆலோசனைகள் துன்மார்கருடைய உள்ளத்திலே தங்கியிருக்கும். பாவங்கள், பரியாசங்களும், களியாட்டுக்களும், பாவிகளுடைய வழியிலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்திலும் இருக்கும். எனவே, ஒரு விசுவாசியாவன் தன் சொந்த தீர்மானத்தின்படி, துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் இருந்தால், அவன் தன்னை அநேக தீமை களுக்கும், பாவ சோதனைகளுக்கும் விலக்கிக் காத்துக் கொள்வான். ஆனால், சில வேளைகளிலே தவி ர்க்க முடியாத சூழ்நிலைகளிலே, துன் மார்கர்களையும், பாவிகளையும், பரியாசக்காரர்களைம் சந்திக்கும் சந்தர்பங்கள் விசுவாசிகளின் வாழ்விலே உண்டாகிவிடுகின்றது. அந்த சூழ்நிலைகளை நாம் வேத வார்த்தையின்படி ஞானமாய் நடந்து, ஜெயங் கொள்ளும்படிக்கு, கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்க வேண்டும். (சங்கீதம் 1:1-2) சில சந்தர்ப்பங்களிலே விசுவாசிகள், மற்றவர்கள் செய்த நன்மையை மறந்து, விசுவாசிகள் மற்றவர்களுக்கு தீமை செய்து விடுகின்றார்கள். 'நன்மைக்குத் தீமை செய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.' (நீதி 17:13) எனவே, ஒருவேளை நீங்கள் நன்மைக்கு தீமை செய்திருந்தால், சீக்கிரமாய் ஒப்புரவாகிக் கொள்ளுங்கள். ஒருவன் நீங்கள் செய்த நன்மைக்கு தீமை செய்திருந்தால், அவனும் உங்களோடு ஒப்புரவாக்கிக் கொள்வது அவனுக்கு நன்மையை உண்டாக்கும். இவ்வண்ணமாக ஒருவன் உங்களுக்கு தீமை செய்யும் போது, கோபத்திலே மனம் பதறி, உடனடியாக தீமை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஒருவன் உங்களை வலக்கன்னதில் அறையும், நீங்கள் மறுபடியும் அவனுடைய வலக் கன்னத்திலே அறைந்தால், அந்த சண்டையானது ஓய்ந்து போவதில்லை. ஒருவன் உங்களை நிந்திக்கும் போது, நீங்கள் அவனை மறுபடியும் நிந்தித்தால், அது ஒரு தொடர்கதையைப் போல இருக்கும். கிறிஸ்துவினிமித்தம் பாடுகளை சகித்தக் கொள்ள பழகிக் கொள்ளு ங்கள். உங்களை அழைத்தவர் உங்களை அறிந்திருக்கின்றார் எனவே உங்களை துன்பப்படுத்துகின்றவர்களுக்கு, அவர்கள் கொடுப்பது போன்ற பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடு ங்கள்.
ஜெபம்:
என் அறியாமையின் நாட்களை எனக்கு மன்னித்த தேவனே, என்னை நிந்திக்கின்றவர்களை நான் நிந்திக்காதபடிக்கு, உம்மைப்போல நான் நன்மை செய்யும்படிக்கு எனக்கு பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதி 17:14