தியானம் (சித்திரை 16, 2025)
ஆவியின் போராட்டம் வெற்றி தரும்
எபேசியர் 6:11
தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள்.
கோணலும் மாறுபாடுமான உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கும் விசுவாசிகளே! 'நாம் தேவனால் உண்டாயிருக்கின்றோமென்றும், உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கின்தென்றும் அறிந்திருக்கின்றோம். (1 யோவான் 5:19). அதனால், நாம் செல்லும் இடமெங்கும் தீமை சூழ்திருக்கின்றது. அதைக் கண்டு நாம் பயந்து மருளுகின்றவர்கள் அல்லர். ஆனால், நம்மை நோக்கி வரும் தீமைகளுக்கு நாம் எப்படி பதிலளிக்கப் போகின்றோம் என்பதைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இதற்கான வழிமுறைகளை பரிசுத்த வேதாகமம் நமக்கு கற்றுக் கொடுகின்றது. நாம் இந்த உலகத்திலே மாம்சத்திலே நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கின்றவர்கல்ல. (2 கொரி 10:3). அதாவது, இந்த உலகத்தார் யாவரைப் போலவும் நமக்கு ஒரு சரீரம் உண்டு. அந்த சரீரத்திலே நாம் கொஞ்சக் காலம் வாழ்கின்றோம். நாம் உயிர் வாழும்வரை இந்த உலகத்திலே செய்ய வேண்டிய காரியங்கள் உண்டு. ஆனாலும் அவைகளை நம்முடைய மாம்ச சிந்தையின்படி அல்லது இந்த உலகத்தின் ஆலோசனையின்படி செய்கின்றவர்கள் அல்லர். அயலிலே வாழும் ஒருவன் உங்களை சண்டைக்கு இழுத்தால், அது வாய்ச் சண்டையாக இருந்தாலும், கைகலப்பாக இருந்தாலும், அந்த தீமையானது மாம்ச இச்சைக்குரியது. எனவே, நாம் மாம்சத்தின்படி தீமைக்கு எதிர்த்து நிற்க முடியாது. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்திற்கேற்றவைகளா யிராமல், அரண்களை நிர்மூலமாகுகிறதற்கு தேனுவ பலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மனமேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்கு கீழ்படியச் சிறைப்படுத்துகின்றவர்களாயிருக்கின்றோம். (2 கொரி 10:4-5). எனவே, நாம் தீமைக்கு, இந்த உலகத்தின் போக்கின்படி எதிர்த்து நிற்காமல், தேவ ஆவியின்படி எதிர்த்து நிற்கின்றோம். ஆவியின் போராட்டதை போராடுவதற்கு, பரிசுத்த வேதாகமம் கூறும் சர்வாயுதவர்கர்தை தரித்தவர்களாக, காணப்படவேண்டும். இவ்வண்ணமாகவே நாம், நன்மையினாலே தீமையை மேற்கொள்ளும்படிக்கு, நாம் தேவனுடைய கரத்தின் கிரியைகளாக காணப்படுகின்றோம். எனவே, தீமைக்கு தீமை யின்படி எதிர்த்து நிற்காமல், தேவ வார்த்தையின்படி அவைகளை மேற்கெண்டு முன்னேறிச் செல்வோமாக.
ஜெபம்:
தீமை என்னை மேற்கொள்ளாதபடிக்கு என்னை காத்து வழிநடத்தும் தேவனே, உம்முடைய ஆவியினாலே, என்னை எதிர்த்து வரும் தீமைகளை மேற்கொள்ள என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:15