புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 06, 2025)

கற்பனைகளின் கருப்பொருள்

புலம்பல் 3:22

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.


மனிதனோ, மற்றவர்களுடைய வெளியரங்கமாக இருக்கும் கிரியைகளை பார்த்து, அவர்களை நியாயந்தீர்கின்றான் ஆனால், தன்னுடைய இருதயத்திலே மறைந்திருக்கும் பாதகமான இச்சகைகளை தேவன் ஆராய்ந்தறிகின்றார் என்பதை உணராதிருக்கின்றான். 'எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விப சாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். மனிதர்களின் உள்ளத்திலிருக்கும் இச்சைகளுக்குதக்கதாக தேவன் நீதியை சரிக்கட்டுகின்றவராக இருந்தால், யார் இந்த உலகத்திலே தப்பித்துக் கொள்ள முடியும்? ஒரு சமயம், விபசாரத்திலே கண்டுபிடிக்க ப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் ஆண்டவர் இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல் லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக்கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். ஆம் பிரியமானவர்களே, தேவனுடைய கற்பனைகளைக் குறித்து தப்பான எண்ணங் கொள்ளாதபடிக்கு, தேவனை அறிகின்ற அறிவிலே வளர்ந்து பெருகுங்கள். கற்பனைகளின் கருப்பொருளை அறிந்து கொள்ளுங்கள். 'அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்மு டைய அக்கிரமங்களுக்குத்தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.' வேத வார்த்தைகளின்படி மற்றவர்களுடைய ஒவ்வொரு குற்றங்களும் தண்டிக்கபட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு, உங்கள்மேல் வெளிப்பட்ட தேவ இரக்கத்தை மற்றவர்களுக்கு காண்பியுங்கள்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, என்னுடைய இருதயமானது உமக்கு முன்பாக உண்மையுள்ளதாக இருக்கும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 103:8-13