புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 30, 2025)

தேவ பக்தியே பிரயோஜனமுள்ளது

1 தீமோத்தேயு 4:8

சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது;


சில மனிதர்கள் தங்கள் சரீரங்களை வருத்தி, உற்சாகத்துடன், வேலை செய்து வருகின்றார்கள். அதனால், தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்கின்றார்கள். எனவே, சரீர முயற்சியினால் பிரஜோனம் உண்டு. ஆனால், தங்கள் ஆத்துமா இரட்சிப்படையும்படி, தங்கள் ஆவிக்குரிய பெலவீனங்கள் நீங்கும்படி தங்கள் சரீரங்களை மாத்திரம் வருத்திக் கொள்வதால் அதனால் உண்டாகும் பலன் அற்பமே. இந்நாட்களில், உலகலாவிய ரீதியிலே, கிறிஸ்தவர்கள் தபசு நாட் கள் என்று நியமித்து, ஆண்டவராகிய இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்தெழுதலை நினைவு கூருகின்றார்கள். அதன்பொருட்டு, பற்பல தியாகங்கள், ஒறுத்தல்கள், அன்னதானங்கள் போன்றவற்றை செய்து வருகின்றார்கள். அவைகளை தேவ ஆவியானவரின் வழிநடத்துதலோடு கருத்தோடு அனுசரிப்பது நன்மையை உண்டாக்கும். சிலர், இந்த நாட்களிலே சவுக்குகளினாலே தங்களை தாங்கள் அடித்துக் தங்கள் சரீரங்களை காயப்படுத்திக் கொள்கின்றார்கள். ஒருவன் தன் சரீரத்தை காயப்படுத்துவதினால், அவன் ஆத்துமாவிற்கு மேன்மை உண்டாகும் என்றால், அவிசுவாசிகளும், கர்த்தரை அறியாதவர்களும், காலாகாலமாக தங்கள் சரீரங்களை அதிகதிகமாக காயப்படுத்தி, தங்கள் கண்களை சேதப்படுத்தி, தங்கள் அவயவங்களை வருத்தி வருகின்றதை நாம் அறிந்திருக்கின்றோம். அதனால் ஆத்தும இரட்சிப்போ, மனமாற்றமோ உண்டாவதில்லை. முதலாவதாக, நீ கர்த்தராகிய இயேசுவை உன் இருயத்திலே விசுவாசி. பின்னர் அதை உன் வாயினாலே அறிக்கை செய். அவரை விசுவாசித்தால், அவருடைய வார்த்தையிலே நிலைத்திரு. அப்பொழுது உன் வாழ்க்கையிலே மிகுந்த கனிகளை நீ கொடுப்பாய். ஆதியிலிருந்து, தேவனாகிய கர்த்தர்தாமே, மனிதனுடைய வெளியரங்கமான செயல்களை குறித்ததல்ல, அந்த செய்கைகளை உருவாகும் இருதயத்தை குறித்தே ஆலோசனைகளையும் எச்சரிப்பையும் வழங்கி வருகின்றார். ஒரு விசுவாசியானவன், தன் இருதயத்திலே கர்த்தருக்கு பிரியமில்லாத சுபாவங்களையும், எண்ணங்களையும் ஒருபக்கம் வைத்துக் கொண்டு, அவைகளை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணமில்லால், தன் சரீரத்தை வருத்துவதாலும், பட்டினியிருப்பதினாலும், அவனுக்கு உண்டாகும் பலன் அற்பமே. எனவே, தேவ பக்தியுள்ளவர்களாக இருங்கள். சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவபக்தியானது இந்த ஜீவனு க்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

ஜெபம்:

பரலோக தந்தையே, பலத்தினாலும் அல்ல, பராக்கிரம்தினாலும் அல்ல உம்முடைய ஆவியினாலே ஆகும் என்ற வார்த்தையைவிட்டு விலகிப் போகாதபடிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:2