புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 23, 2025)

நல்மனம் பொருந்த தாமதிக்காதிருங்கள்

மத்தேயு 5:25

நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.


ஒரு விசுவாசியாவன், தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாக காணப்படும் பொருட்டு, சக விசுவாசிகளுக்கும், மற்றய மனிதர்களுக்கும் முன்ப தாக குற்றமற்றவனாக காணப்பட வேண்டும். அதாவது, தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக அவன் பாவம் செய்யாதபடி தன்னை காத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அவன் இன்னுமொருவனுக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்து விட்டால், வேத வார்த்தையின்படி, அவன் அவனோடு சீக்கிரமாக ஒப்புரவாகிக் கொள்வது அந்த விசுவாசிக்கு நல்லது. விசுவாசியானவன் மற்றவர்களுக்கு இரக்கங்காட்டி மன்னிக்கின்றவனும், தன் குற்றங்களுக்காக மனம்வருந்தி மற்றவர்களிடம் மன்னிப்பை கேட்கின்றவனுமாக இருக்க வேண்டும். எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து. பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். ஒரு விசுவாசியானவன், தன் குற்றங்களை நியாயப்படுத்த அல்லது மறைக்க முற்படுவனாக இருந்தால், அதனால் அவனுக்கு பாரிய பின்விளைவுகள் ஏற்படக்கூடும். இந்த உலகில் தண்டனையையும், மறுஉலகிலும் நித்திய தண்டனையை அனுபவிக்க நேரிடும். விசுவாசமார்கத்தார் நன்மை செய்து பாடநுபவத்தால் அது அவனுக்கு பாக்கியமாக இருக்கும். ஆனால், தீமை செய்து பாடநுபவிப்பது, பரிதாமும், தேவ நாமம் தூஷிக்கப்படுவற்கு ஏதுவா கவும் இருக்கும். எனவே, குற்றதில் அகப்பபட்டால், மனிதர்கள் உங்களை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முன்பு, அவர்களோடு ஒப்புரவாகுங்கள். அது மட்டுமல்ல, தேவனுடைய பாதத்திலே உங்களை தாழ்த்தி, மனம்வருந்தி, உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, விட்டுவிடுங்கள். இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிரு பையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேருங்கள். தேவ ஆவியானவர் உங்களை சகல சத்தியத்திலும் வழிநடத்த இடங் கொடுங்கள். உங்களை வேதனை உண்டாக்கும் வழிகளுக்கு உட்படுத்தும் தொடர்புகளையும், ஐக்கியங்களையும் விட்டுவிட ஆயத்தமுள்ளவர்களாயிருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, என் பாவங்களை மறைத்து, அவற்றை நியாயப்படுத்த முயற்சிசெய்கின்ற எண்ணங்கள் எனக்கு தூரமாக இருப்பதாக. எப்போதும் உமக்கு முன்பாக உண்மையுள்ளவனாக இருக்க கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 58:1-11