புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 21, 2025)

தேவனுக்கு பிரியமான பலிகள்

ஓசியா 6:6

பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.


தாவீது ராஜாவானவன், தேவனுடைய பெட்டியை அதன் ஸ்தானதிற்கு கொண்டுவரும்படி இரண்டாவது தடவையான முயற்ச்சி செய்த வேளையிலே, அவன் தேவனுக்கென்று பலிகளை செலுத்தினான். அவனுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக ஏற்புடையதாக இருந்தது. ஆனால், காலங்கள் கடந்து சென்று அவன் பாவம் செய்த போது, தன்னுடைய மனதிலிருப்பதை சங்கீதமாக பாடினான். அந்த சங்கீதத்திலே, 'பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கே ற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.' என்று பாடினான். அதாவது, தேவனுக்கென்று பலிகளை செலுத்த முன்பதாக, பலியை செலுத்துகின்றவனுடைய இருதயமானது, தேவனுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். அக்கிம சிந்தையோடும், மனந்திரும்பாத இருதயத்தோடும், மன்னிக்க முடியாத மனதோடும், செலுத் தும் பலிகளிலே தேவன் பிரியமாக இருக்கமாட்டார். சவுல் ராஜாவானவன், தேவனுடைய சத்தத்திற்கு செவிகொடுக்காமல், குற்றம் செய்த போது, தீர்க்கதரிசியாகிய சாமுவேல், சவுல் ராஜாவை நோக்கி: 'கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கி லும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.' என்று கூறினார். எனவே, தேவனானவர் இருதயங்களை ஆராய்ந்து அறிகின்றார். மனிதர்களுடைய சிந்தையிலுள்ளவைகளை அறிந்திருக்கின்றார். எனவே, நம்முடைய ஆராதனை தேவனுக்கு பிரியமுள்ளதாக இருக்க வேண்டும் என்றால், நம்முடைய இருதயம் அவருக்கு முன்பாக தாழ்த்தப்பட வேண்டும். 'ஆகையால், நீ பலிபீ டத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். இது தேவ நீதி. எனவே, இரக்கத்தை காண்பியுங்கள். மன்னிக்க ஒப்புரவாக தாமதியாதிருங்கள்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, என் இருதயத்தில் அக்கிம சிந்தையை நான் மறைத்து வைக்காமல், உம்மிடம் அறிக்கையிட்டு, மனதிரும்பும் உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 சாமு 15:22