புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 19, 2025)

கொலை பாதகன் யார்?

1 யோவான் 2:9

ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.


கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பது பழைய ஏற்பாட்டின் காலத்திலே, தேவ தாசனாகிய மோசே வழியாக, பத்துக் கட்டளைகளில் ஒன்றாக கொடுக்கப்பட்டது. இதைக் கேட்கும் விசுவாச மார்க்கத்தாரில் ஏறத்தாழ யாவரும், அன்றும் இன்றும், மனத்திருப்தியடைந்து கொள்கின்றார்கள். நான் இந்தக் கட்டளையின்படி குற்றவாளியல்ல என்று கூறிக் கொள்வார்கள். ஆனால், ஆண்டவராகிய இயேசு இந்தப் பூமிக்கு வந்தபோது, இந்த கட்டளைகளின் தார்ப்பரியத்தை தம்மை பின்பற்றுகின்றவர்களுக்கு விளக்கிக் கூறினார். 'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத் திற்கு ஏதுவாயிருப்பான்.' என்று ஆண்டவராகிய இயேசு கூறினார். பத்துக் கட்டளைகளை கைகொள்ளது கடினம் என்றால், இதை யாரால் கைகொள்ள முடியும்? இந்தப் பகுதியை வாசிக்கும் விசுவாச மார்க்கத்தார் சீக்கிரமாக இதை வாசித்து, மற்றய பகுதிக்கு கடந்து செல்கின்றார்கள். சிலர் இவைகளை வேதாகம கல்லூரியின், அடிப்படைப் பாடத்திட்டத்தில் இவைகளை கற்றுவிட்டு, பரீட்சையில் சித்தி பெற்று, சீக்கிரமாக மேற்படிப்புக்கு கடந்து சென்று, இந்த உலக முறைமையின்படி வேதத்திலே கலாநிதிப் பட்டமும் பெற்று, உலகில் பிரசித்தி பெற்ற பெரிய மேடையகளிலே போதிப்பதற்கு தகுதியுள்ளவர்களாகின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் அவ்வளவு சீக்கிரமாக கடந்து செல்ல முடியாது. இந்தக் கட்டளையானது, நம்முடைய வாழ்க்கையின் அடிப்படைக் கட்டளைகளிலே ஒன்றாயிருக்கின்றது. இது எங்கள் அனுதின வாழ்வின் பெரும்பகுதியாக இருக்கின்றது. அதாவது, பகை, வன்மம், கசப்பு போன்ற மாசத்தின் இச்சைகள் யாருடைய மனதிலே குடிகொண்டிருக்கும்? தனக்கெதிராக குற்றங்களை செய்கின்ற வர்களை மன்னித்து மறந்து விடுகின்றவனுடைய உள்ளத்தில் இருக்குமோ? அல்லது குற்றங்கள் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்கின்ற இரக்கமற்ற மனதை உடையவர்களில் உள்ளததில் இருக்குமோ? சிந்தித்துப் பாருங்கள்! கொலை பாதகத்திற்குரிய வைகளைவிட்டு, ஜீவனுக்குரிய மேன்மையானவைகளை நாடுங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, என்னில் இடறுதல் ஒன்றும் இராதபடிக்கு, ஒளியிலே நடக்கும் வழியைக் குறித்த உணர்வு எனக்குள் பற்றியெரியும்படிக்கு, உம்முடைய தூய ஆவியினாலே என்னை வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:7

Category Tags: