தியானம் (பங்குனி 18, 2025)
நீதியிலே நிலைத்திருக்கின்றவன்
யாக்கோபு 1:25
அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.
ஒரு தேசத்திலே சட்டங்களை ஏற்படுத்தி, அவைகளை அமுல்படுத்துகி ன்றவர்கள், அந்த சட்டங்கள் தங்களுக்கு அல்ல, தேசத்தின் குடிமக் களுக்கே என்று எண்ணிக் கொள்ளும் போது, அங்கே அதிகார துஷ்பிரயோகம் ஏற்படுகின்றது. ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்த நாட்களிலே, இருந்து மதத் தலைவர்களில் பெரும்பான்மை யானோர், அவ்வண்ணமாகவே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றவர்களாக இருந்தார்கள். அதனால், அவர்கள் இருதயம் கடினப்பட்டுப் போயிற்று. தேவ சித்தத்தை நிறைவேற்றுவதைவிட, தங்கள் கொள்கை கோட்பாடுகளே முதன்மையானது என்று அதற்குள்ளே தங்களை சிறைப்படுத்திக் கொண்டார்கள். அதினால், பொய்சாட் சிகளை ஏற்படுத்தி, தங்களை இரட்சிக்க வந்த தேவகுமாரனை கொலை செய் தார்கள். இன்று அதிகார துஷ்பிரயோகங்கள் எங்கே நடைபெறுகின்றது? நாம் அதிக தூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை. அவை முதன்மையாக வீட்டிலே ஆரம்பிக்கின்றது. அது எப்படி? பெற்றோர்கள் தேவனுடைய கற்பனைகளை, தங்கள் பிள்ளைகளுக்கு கைக்கொண்டு போதிக்காமல், அவைகளை கைகொள்ளாமல், பிள்ளைகளுக்கு போதிப்பதால், அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றார்கள். எடுத்துக்காட்டாக, முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அதன் நீதியையும் பெற்றோர்கள் தேடாத பெற்றோர், அதை எப்படி பிள்ளைகளுக்கு போதிக்க முடியும். தங்கள் வாழ்க்கையிலே உழைப்பை மேன்மைப் படுத்தும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கையிலே கல்வி கற்பதையே முதன்மையாக்கிக் கொள்வார்கள். இவை இரண்டும், தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் முதன்மைப் படுத்தி தேடுகின்றவர்களுக்கு, தேவன் அருளிச் செய்கின்றார். எனவே, சபையை, பாடசாலையை, வேலை ஸ்தலங்களை, அரசாங்கங்களை குற்றப்படுத்துவதற்கு முன்னதாக, வீட்டிலே, உங்கள் இருதயத்திலே முதன்மையாக இருப்பது என்ன என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். அப்படியாக நாம் நம்மை ஆராய்ந்து பார்த்து, தேவ வார்த்தைகளை கைகொண்டு போதிக்காவிட்டால், நம்முடைய நீதியும் பரிசேயர் வேதபாரகருடைய நீதிக்கு ஒத்ததாகவே இருக்கும்.
ஜெபம்:
பரலோக பிதாவே, நான் வீட்டில் வெளியிலும் தேவ நீதியிலே நிலைத்திருக்கும் பொருட்டு, உம்முடைய வசனத்தை என் இருதயத்திலே பதித்து வைத்து, அதன்படி நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 17:15