புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 15, 2025)

'உள்ளும் புறமும்'

மத்தேயு 5:19

இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.


நம்முடைய நாளாந்த வாழ்க்கையிலே, ஒருவர் உங்களுக்கு புத்திமதிகளை கூறிவிட்டு, அதை கூறியவர் அதை கைகொள்ளாவிடின், நீங் கள் அவரைப் பார்த்து என்ன கூறுவீர்கள்? 'இவர்கள் சொல்லு தொன்று, செய்வது வேறொன்று' அல்லது 'உனக்கில்லை உபதேசம் அது ஊருக்கு மட்டும்' என்று கூறுவீர்கள் அல்லவா? ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, வேதபாரகர், பரிசேயர், என்ற சிறப்பு குழுக்களை சேர்ந்த மனிதர்கள் இருந்தார்கள். இந்த குழுக்களிலே இருந்தவர்கள், நியாயப்பிரமாண கட்டளைகளை நன்றாக அறிந்திருந்தார்கள். அது மட்டுமல்ல, அதை மற்றவர்கள் கைகொள்ள வேண்டும் என்பதற்காக இன்னும் அதிகமான ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தி, அந்த நீதியை கைகொள்ளாமல் இருக்கின்றவர்களை கடுமையாக தண்டித்தார்கள். ஆனால், அவற்றை போதித்து மற்றவர்களுடைய வாழ்க்கையிலே அமுல்படுத்தும் பரிசேயர் வேதபாரகருடைய நிலைமை என்ன? ஆண்டவராகிய இயேசு அதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர் கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்க ளின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். (மத்தேயு 23:25-18). ஆதாலால், பரிசேயர் வேதபாரகருடைய மாயமான நீதியைவிட நம்முடைய நீதியானது உள்ளும் புறமும் தேவனுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு போதிப்பதற்காக நாம் வேதத்தை கற்றுக் கொள்ளாமல், ஒரு விசுவாசியானவன, முதலாவதாக, தன் வாழ்விலே வேத வார்த்தைகளை கைக்கொண்டு நடக்கும்படிக்கு வேததத்தை கருத்தோடு கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

நீதியின் தேவனே, நான் என் வாயினால் உம்மை புகழ்ந்து, இருதயத்திலே உமக்கு தூரமாக இராதபடிக்கு, உள்ளும், புறமும், உமக்கு உகந்த பாத்திரமாக இருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 15:6-9