தியானம் (பங்குனி 04, 2025)
சட்டதிட்டங்களை கைகொள்ள வேண்டுமா?
ரோமர் 13:1
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்;
நாளாந்த வாழ்க்கையிலே, ஒருவனுக்கு வேறொருவனோடு கருத்து முரண்பாடு அல்லது வழக்கு உண்டாகும் போது, அதை தீர்த்து வைப்பது எப்படியென்று ஒழுங்கு முறைகளை நியாயப்பிரமாணத்தின் சமூக உரிமையியல் சார்ந்த சட்டதிட்டங்கள் வரையறுத்து கூறுகின்றது. இன்று மனிதர்கள் தங்களுக்குள் வழக்கு உண்டாகும் போது, அதை தீர்த்துக் கொள்வதற்கு, பொதுவாக நீதிமன்றங்களுக்கு செல்கின்றார்கள். அதாவது, இந்த உலகிலே மேலான அதி காரங்கள் நமக்கு நியமிக்கப்பட்டிரு க்கி ன்றது. அந்த அதிகாரங்களுக்கு நாம் கட்டுப்பட்டு இருக்கின்றோம். இந்த சமூக உரிமையியல் நீதித்துறை அமைப்பானது மோசேயின் நாட்களிலே நியாயப்பிரமாணத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டது. கிறிஸ்துவுக்குள், மேலாக அதிகாரங்களுக்கு நாம் கீழ்படிய வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. 'எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை. உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். மேலும் அதிகாரிகள் நற் கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்க வேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமை செய்தால் பயந்திரு. பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே. ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச் சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும். இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார் த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே' (ரோமர் 13:1-6). இதன் கருப்பொருள் என்ன என்பதை தியானித்துப் பாருங்கள். அன்று நியாயப்பிரமாணதிலிருந்த சமூக உரிமையியல் சார்ந்த சட்டதிட்டங்கள் இன்று இந்த உலகின் மேலான அதிகாரங்களால் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. நாம் அவற்றிற்கு கிஸ்துவுக்குள் கீழ்படிய கடமைபட்டிருக்கின் றோம்;.
ஜெபம்:
பரலோக தேவனே, கிறிஸ்து வழியாக நான் பெற்றுக் கொண்ட சுயாதீனத்தை துஷ்பிரயோகம் செய்யாமல், காரியத்தின் கடைத்தொகையை நிதானித்தறிந்து, உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 தீமோ 2:1-2