புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 03, 2025)

பண்டிகைகளின் கருப்பொருள்

கொலோசெயர் 2:17

அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.


நியாயப்பிரமாணமானது மோசே வழியாக தேவ ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது. அவைகளை பின்வரும் ஒழுங்கிலே வகைப்படுத்தி ஆராய்ந்து கொள்வோம். முதலாவாது, பண்டிகைகளைக் குறித்த ஒழுங்கு முறைகள், இரண்டாவது, சமூக உரிமையியல்களைக் கொண்ட நீதித்துறை, மூன்றாவதாக, தேவத்துவத்தின் தன்மைகள் அடங்கிய ஒழுக்க நெறிகளும், கட்டளைகளும். இதற்குள் புத்துக் கட்டளைகளும் அடங்கும். முதலாவதாக, பண்டிகைகளின் கருப் பொருளைக் குறித்து தியானம் செய்வோம். நியாயப்பிரமாணத்திலே, ஏழு பண்டிகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. 1. பஸ்கா பண்டிகை, 2. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, 3. அறுப்பின் முதற்பலன், 4. அறுவடை திருநாள் (பெந்தேகோஸ்தே நாள்) 5. எக்காள பண்டிகை, 6. பாவநிவர்த்தி செய்யும் நாள், 7. கூடாரப் பண்டிகை என்ப தாகும். (யாத்திராகமம் 12, லேவியராகமம் 23). இந்தப் பண்டிகைகளைக் வெறும் சம்பிராயமும், சடங்காச்சாரமும் அல்ல. இவை களை குறித்து பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகின்றது? 'ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது. அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.' (கொலோ 2:16-17). இரட்சகராகிய இயேசு கிறிஸ்துதாமே, நியாயப்பிரமாணத்தை அழித்துப் போட வரவில்லை. மாறாக அவற்றை நிறைவேற்றும்படி இந்த பூமிக்கு வந்தார். அவருடைய முதலாம் வருகையிலே முதல் நான்கு பண்டிகைகளையும் நிறைவேற்றி முடியத்தார். அவை முறையே: சிலுவை மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரிசுத்த ஆவியின் வருகை போன்ற நிகழ்வுகளை முன்குறித்தது. மிகுதியான பண்டிகைகள் அவருடைய இரண்டாம் வருகையிலே நிறைவேறும். ஆகவே, நியாயப்பிரமாணத்தில், இந்தப் பகுதியை நீங்கள் தியானிக்கும் போது, இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கொள்ளுங்கள். அதுவே நியாயப்பிர மாணத்தின் கருப்பொருள். அவரோடு உங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் சிதறடிக்கப்பட்டு போய்விடுவீர்கள். ஆண்டவர் இயேசு இல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. வேதத்தையும், நியாயப்பிரமாணங்களையும் கருத்தோடு கற்றுக் கொள்கின்றவர்கள் இந்த சத்தியத்தை மனதார அறிந்து கொள்கின்றார்கள்.

ஜெபம்:

உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்ட தேவனே, காரியங்களின் கடைத்தொகை நான் நன்கு உணர்ந்து, கிறிஸ்துவிலே உறுதியாய் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 1:4