தியானம் (மாசி 26, 2025)
மனிதனுடைய சொந்த பெலன் குறைவுள்ளது
ரோமர் 13:9
உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக
நியாயப் பிரமாணத்தில் கொடுக்கப்பட்ட கட்டளைகளை யாரால் நிறை வேற்ற முடியும்? ஒரு சமயம், ஆண்டவராகிய இயேசுதாமே வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்ப டியிட்டு: நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கின்ற கற்பனைகளை கைகொள் என்றார். அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயது முதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன் னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோ கத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.' (மாற்கு 10:17-23). இந்த உலகத்தின் பார்வையிலே, வெளிப்படையாக நியாயப்பிரமாணத்தை தாங்கள் கைகொள்கின்றோம் என்று மற்றவர்களுக்கு காண்பித்தவர்களையும், தாங்கள் நீதிமான்கள் என்று தங்களுக்குள்ளே எண்ணிக் கொண்டவர்களையும் வேததத்திலே காணலாம். ஆனால், இருதயங்களை ஆராய்ந்தறிகின்றவர், மனிதர்களின் உண்மையான நிலைமையை அறிந்திருக்கின்றார். மேலே கூறப்பட்ட சம்பவத்திலே, ஆண்டவர் இயேசுவை சந்திக்க வந்தவன், தான் நியாயப்பிரமாணத்தை கைகொள்கின்றேன் என்று எண்ணிக் கொண்டான். ஒரு விசுவாசியானவன் மிகையான செல்வத்திலே வாழ்ந்து கொண்டு, தெருவிலே, ஓரமாக படுத்திருக்கும் ஏழைக்கு, உண்பத்தற்கும் உணவும், உடுபத்தற்கு தகுந்து உடையும், மழைவெய்யிலுக்கு ஒதுங்குவதற்கு இடமும் இல்லாதிருககிறதை கண்டும், அவனுக்கு ஒருவேளை ஆகாரத்தை கொடுத்துவிட்டு தன் கடன் தீர்ந்தது என்று தேவனுக்கு முன்பாக கூற முடியுமோ? அவன் உன்னில் அன்பு கூருகின்றது போல உன் அயலவனிடத்திலும் அன்புகூருவாக யாக என்ற கட்டளையை கைகொள்ளாது போகின்றான். எந்த மனித னுடைய பெலத்தினாலும் தேவ கட்டளைகளை நிறைவேற்ற முடியாது.
ஜெபம்:
மனிதனால் செய்யக்கூடாததை கூடும்படியாய் செய்யும் தேவனே, என் சுயபெலத்தை நம்பி, என் கிரியைகள் வழியாக நான் நீதிமானாகுவேன் என்கின்ற எண்ணத்தைவிட்டு உம்மை நம்பி வாழ கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 5:17-18