தியானம் (மாசி 18, 2025)
வார்த்தையில் நிலைத்திருங்கள்
யோவான் 15:6
ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப் போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்;
இலகுவிலே அதன் சாரத்தை இழந்து போகாத பதார்த்தமாகிய உப்பானது, அதன் சாரத்தை இழந்து போனால், அதை சாரமாக்க முடியாது. உப்பு எப்படியாக அதன் சாரத்தை இழந்து போவது என்பதை கற்றுக் கொள்வது நம்முடைய தியானம் அல்ல. மாறாக ஒரு விவாசியானவன் எப்படி தன் விசுவாசிக்குரிய இயல்பான நோக்கத்தை இழந்து போக முடியும்? அதை நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். 'நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப ;போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.' 'என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கி ன்றார். சாரமிழந்து உப்பானது எதற்கு உபயோகமாகும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. அதுபோலவே, தன் நிiலையைவிட்டு தவறிப்போன விசுவாசியும் இருக்கின்றான். 'ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.' (யோவான் 15:6). ஆண்டவராகிய இயேசுவில் நிலைத்திருப்பதென்பதன் பொருள் என்ன? அவரு டைய வார்த்தைகள் உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் சாரமேற்றப்பட்ட உப்பைப் போல, அழைப்பின் நோக்கத்திலே நிலைத்திருப்பீர்கள். அப்பொழுது, நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பீர்கள். இந்தப் பூமிக்கு பிரயோஜனமுள்ளவர்களாக இருப்பீர்கள். உங்கள் கிரியைகளில் வாயிலாக பரம பிதா மகிமைப் படுவார். ஒருவன் கர்த்தரின் வார்த்தையில் நிலைத்திராவிட்டால் அவனுக்குள் ஜீவன் இல்லாததால், அவன் பிரயோஜனமற்றவனாக வெளியே எறியுண்டு போவான்.
ஜெபம்:
அன்பின் தேவனே, நான் ஒருபோதும் சத்திய வார்த்தைகளை விட்டு வழிவிலகி, நிலை தவறிப்போய்விடாதபடிக்கு, உம்முடைய வார்த்தைகள் என்னிலே எப்போதும் நிலைத்திருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 யோவான் 3:24