தியானம் (மாசி 15, 2025)
தேவ நீதியையே நிறைவேற்றுங்கள்
மத்தேயு 10:28
ஆத்துமாவைக் கொல்ல வல் லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்;
மேதியனாகிய தரியு என்னும் ராஜாவானன், தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த நினைத்தான். அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள். அவன் உண்மையுள்ளவனாயிருந்த படியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. தானியேல் தினமும் மூன்று வேளை தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம் செய்கின்றவன் என்று அறிந்திருந்ததால், அவனுக்கு எதிராக சதி செய்ய தீர்மானம் செய்து கொண்டு, எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையா னாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பிக்கும்படி, துர்ஆலோசனையை பிணைத்து, அதை ராஜ கட்டளை யாக்கினார்கள். தானியேலோவென்றால், தான் முன் செய்து வந்தது போல தினமும் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். அதனால், அவனை பிடித்து சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ஆனால், கர்த்தரோ அவனோடிருந்து, எந்த சேதமும் வராதப டிக்கு அவனை காத்து கொண்டார். பிரியமான சகோதர சகோதரிகளே, தேவனாகிய கர்த்தருக்கு மேற்பட்ட அதிகாரங்கள் ஏதும் இல்லை. சில வேளைகளிலே, சில அதிகாரிகள் தங்கள் மனதை தேவனுக்கு விரோ தமாக கடினப்படுத்திக் கொண்டு, தேவ காரியங்களை விசுவாசிகள் செய்யாதபடிக்கு தடை செய்யும்படி சட்டங்களை பிறப்பிக்கலாம். அந்த வேளையிலே தேவனுக்கு பிரியமான தாசனாகிய தானியேலை நினை த்துக் கொள்ளுங்கள். அவன் எந்த மனிதனுக்கோ, ராஜாவுக்கோ, ராஜ்யத்திற்கோ எந்த தீமையை நினைக்காத தேவனுடைய பிள்ளையாக இருந்து வந்தான். ஆனாலும், அவனை துன்பப்படுத்தும்படிக்கும், தேவனை விட்டு பிரிக்கும்படிக்கும் மனிதர்கள் சதி செய்தார்கள். அவன் தன் தேவனாகிய கர்த்தருக்கு பயந்து நடந்ததால், அவன் அவன் மனிதர்களு க்கோ, உலகின் அதிகாரங்களுக்கோ பயப்படாமல் இருந்தான். அது போலவே, நீங்களும் ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவராகிய தேவனாகிய கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே நடவுங்கள்.
ஜெபம்:
அன்பின் தேவனே, உமக்கு விரோதமான காரியங்களை செய்வதற்கு வரும் தடைகளை கண்டு பயப்படாமல், உமக்கு பயந்து உமது வழியிலே நடக்கும் உண்மையுள்ள விசுவாசியாக இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - தானியேல் 6:22