புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 13, 2025)

உலகம் ஏன் பகைக்கின்றது?

யோவான் 3:20

பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த சில மாணவர்கள், அவ்வப்போது, ஒன்று சேர்ந்து கடற்கரை ஓரமாக சென்று, கடலிலே நீந்தி, சிற்றுண்டிகளை உண்டு வந்தார்கள். அது பலரின் பார்வைக்கு நன்றாக இருந்ததால், ஒரு நாள் அவர்களோடு சேர்ந்து ஒரு விசுவாசியின் மகனானவன் சென்றிருந்தான். அவர்கள் கடலிலே நீந்திய பின் யாவருமாக சேர்ந்து புகைப் பிடிக்க ஆரம்பித்தார்கள். அந்த வேளையிலே, அந்த இடத்திற்கு புதிதாக வந்த விசுவாசியின் மகனாகிய அந்த மாணவனையும், தங்களோடு சேர்ந்து புகைப் பிடிக்கும் படி கேட்டார்கள். புகைப்பிடிப்பது சுகாதரத்திற்கும், உடல் ஆரோக்கி யத்திற்கு கூடாது. நான் என் பெற்றோரை மீறி இப்படியெல்லாம் தகாத காரியங்களை செய்ய மாட்டேன் என்றான். அதை கேட்ட மற்றய மாணவர்கள் யாவரும் அதிர்ச்சியடைந்தார்கள். நீ ஏன் இந்த இடத்திற்கு எங்களோடு வந்தாய் என்று அவனை அதட்டினார்கள். எங்களை காட்டிக் கொடுக்க வந்தாயோ என்று கடிந்து கொண்டார்கள். இன்று நீ எங்களோடு சேர்ந்து புகை பிடிக்காவிட்டால், நீ வீடு திரும்பியதும் எங்களை காட்டிக் கொடுப்பாய். எனவே இப்போது எங்கள் முன்னிலையில் ஒருமுறை புகைத்துக் கொள் அல்லது விரும்பத்தகாத காரியங்கள் இங்கே நடக்கும் என்று அவனை மிரட்டினார்கள். அந்ந நாளிலிருந்து, அந்த மாணவனை பகைத்தார்கள். அவனைக் காணும்போதெல்லாம் அவர்கள் தங்கள் இரகசியமான தகாத பழக்கத்தைக் குறித்து தங்கள் இருதயத்திலே குத்தப்பட்டதால், அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தருணம் பார்த்திருந்தார்கள். நல்வழியை அறிந்திருந்தும், தங்கள் பொல்லாத கிரியைகளை அவர்கள் விரும்புவதால், நீதியின் வழியிலே வாழ விரும்பும் அந்த விசுவாசியின் மகனானவனை வெறுத்தார்கள். அவனை வெறுப்பதற்கு முன்பாக அவர்கள் நீதியின் வழியை வெறுத்தார்கள். அந்தக் காரணத்தினாலே, நீதியின் வழியிலே நடப்பவர்களை காணும்போது, அவர்களை நிந்த்தித்து, துன்ப்பபடுத்துவதற்கு காரணங்களை தேடுகின்றார்கள். எனவே தேவ நீதியின் வழியிலே நடக்கும் போது, துன்பங்களை சந்திக்க நேர்ந்தால், அதைக் குறித்து ஆச்சரியப்படாதிருங்கள். அவர்களுடைய மனதில் இருக்கும் உங்களைக் குறித்த வெறுப்பானது, உங்கள் நீதியின் வாழ்க்கையைக் குறித்து சாட்சி கொடுகின்றது. எனவே மகிழ்ந்து களிகூருங்கள். உங்கள் கைமாறு மிகுதியாயிருக்கும்.

ஜெபம்:

நீதியின் வழியிலே வாழ என்னை அழைத்து தேவனே, இந்த உலகமானது காரணமின்றி என்னைப் பகைக்கும்போது, நான் என்னுடைய திவ்விய சுபாவத்திலே இன்னுமாய் வளரும்படிக்கு எனக்கு பெலன் தந்து வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 4:13

Category Tags: