புதிய நாளுக்குள்..

தியானம் (தை 15, 2025)

பூமியை சுதந்தரித்துக் கொள்வோம்

சங்கீதம் 37:11

சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.


'இராஜாதி ராஜனாம் இயேசு ராஜன், பூமியில் ஆட்சிசெய்வார்' என்ற அழகான பாடலின் வரியை நாம் அறிந்திருக்கின்றோம். (வெளிப்படு த்தல் 17:14 19:16). அவருடைய ஆட்சிக்கு இப்போது தங்களை ஒப்புக் கொடுத்து, அவருக்குள் வாழ்பவர்கள் அவரோடே கூட இந்தப் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள். ராஜாதி ராஜனும், கர்த்தாதி கர்த்தரு மாகிய இயேசுவின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் யார்? அவர்கள் ஆவியிலே எளிமையுள்ளவர்கள், தங்கள் குற்றங்களை நியாயப்படு த்தாமல், அவைகளை ஏற்றுக் கொண்டு, அவைகளுக்காக மனம் வருந்துகின்றவர்கள். தங்களிடம் இருந்த சுயபெலன், சுயநம்பிக்கை, சுய கௌரவம், அந்தஸ்துக்களாகிய அடிமைத்தனங்கள் யாவையும் துறந்து, தங்களை அழைத்தவரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்படிக்கு, தங்களை முழுமனதோடு அடிமைகளாக அவருக்கு ஒப்புக் கொடுத்தவர்கள். (ரோமர் 6:17-18). இவர்கள் சாந்தகுணமுள்ளவர்கள். இவர்கள் கிறிஸ்துவின் நல்ல போர்ச்சேவகர்கள். பேச்சிலே மாத்திரமல்ல, தங்கள் செய்கைகளிலே அமைதலுள்ள ஆவியை அலங்காரமாக கொண்டவர் கள். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். (யோவான் 16:33). அவர் இந்த உலகத்தை எப்படி ஜெயங்கொண்டார்? அவர் மரணத்தையும் பாதாளத்தையும் எப் படி வெற்றி கொண்டார்? மாம்ச சிந்தையினாலோ? இல்லை. பிதாவா கிய தேவனுடைய சித்தத்தை தன் வாழ்விலே செய்ய ஒப்புக் கொடுத்ததினாலே, அவர் ஜெயங் கொண்டார். 'எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்க ளையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.' (2 கொரி 10:4). நாம் அவரோடே கூட, பாடுகளை சகித்து, அவர் வழியாக அவைகளை ஜெயங் கொள்ளுவோமாக இருந்தால், அவர் ராஜாதி ராஜாவாக மறுபடியும் வரும்போது, அவரோடு கூட பூமியை சுதந்தரித்துக் கொள் வோம். 'நாம் அவரோடேகூடமரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;. அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்;' ( 2 தீமோ 2:11-12)

ஜெபம்:

அன்பின் தேவனே, கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்ற உண்மையை உணர்ந்தவனாக, முற்றாக என்னை ஒப்புக் கொடுத்து வாழ என்னை வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 2:12