தியானம் (தை 13, 2025)
மந்தையை சிதறடிக்காதிருங்கள்
மத்தேயு 12:30
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
மென்மையான தொனியுடன், அமைதலாக பேசுவது நல்லது. ஆனால், அந்த பேச்சின் பின்ணனி என்ன என்பது வெளிப்படும் போது, அந்த பேச்சாளரின் மனதிலே சாந்த குணமா அல்லது வஞ்சனையா இருந்தது என்பது வெளிப்படும். ஆண்டவர் இயேசுவோடு மந்தையை சேரக் காதவன், அவைகளை சிதறடிக்கின்றான். அதாவது, வேற்றுமைகள், சவால்கள், பிரச்சனைகள் ஏற்படும் போது, மந்தைகளை ஆவிக்குரிய யுத்தத்திற்கு பயிற்சிவிக்கின்றவன், அவன் தேவனுக்குரியவனாக இருப்பான். ஆனால், எந்த விதத்திலும் பிரிவினைகளுக்கு ஏதாவது இருக்கின்றவன், மந்தைகளை சிதடிக்கின்றவனாக இருக்கின்றான். அவன் சாந்தமாக பேசினாலும், அவனிடத்திலே சாந்த குணம் இல்லை. ஆதியிலே, பிசாசானவன், தன் இனிமையான பேச்சினால், ஏவாள் அடையக்கூடிய மேன்மையான ஸ்தானம் உண்டு என்று அவளுக்கு போதித்தான். அந்தப் பேச்சு அவளுக்கு யாதார்த்தமுள்ளதாக இருந்தது. அதன் முடிவு என்ன, தேவனுக்கும், மனிதகுலத்திற்கும் நிரந்தர பகையும், பிரிவினையும் உண்டா யிற்று. ஆண்டவராகிய இயேசுதாமே, மனத்தாழ்மையும், கீழ்ப்படிவும், சாந்தமுமுள்ளவராக வந்தார். மிகப் பயரங்கரமான பாவிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கு, மனதுருக்கங்காட்டி, அவர்களோடு பந்தியமர்ந்தார். சாந்தம் என்றால் என்ன என்று வாழ்ந்து காட்டிய இயேசு தாமே, பாஸ்கா பண்டிகை நாடகள் சமீபமாக இருந்த போது, எருசலேம் தேவாயலத்திற்கு சென்றார். தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களா கிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடு மாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப் போட்டு, புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடா க்காதிருங்கள் என்றார்.' அந்த வேளையிலே, ஏழை பணக்காரன், உயர்ந்தன், தாழ்ந்தவன் என்று எந்த முகத்தாட்சண்யமும் அவர் காண்பிக்கவில்லை. பிரியமானவர்களே, நீதியை அநீதியென்றும், முறைகேடுகளை ஒழுக்கம் என்றும் ஆதரிப்பது வேதம் கூறும் சாந்த குணத்தின் இயல்பு அல்ல. இப்படிப்பட்ட காரியங்களை நடப்பிக்கின்றவர்கள், மந்தைகளை இயேசுவிடம் இருந்து சிதறிப்போக பயிற்சிவிக்கின்றார்கள். எனவே, நீங்கள் எப்போதும் இயேசுவோடு சேர்க்கின்றவர்களாக இருங்கள்.
ஜெபம்:
பரிசுத்தமுள்ள தேவனே, சாந்த குணமுள்ளவராகிய உமது சிட்சையையும், கடிந்து கொள்ளுதலையும் கண்டு நான் உம்மைவிட்டு ஓடிப்போகாமல் இருக்க, பிரகாரமுள்ள மனக்கண்களை தந்து என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஏசாயா 1:19