புதிய நாளுக்குள்..

தியானம் (தை 11, 2025)

சாந்த குணமுள்ளவர்கள் யார்?

மத்தேயு 5:5

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.


ஒரு ஊரிலே அமைதலான வாழ்க்கை வாழ்ந்து வந்த விசுவாசியொருவனுக்கு, அவனுடைய அயலவன், அந்த விசுவாகியானவனின் குடும்பத்திற்கு நன்மைக்கு தீமை செய்துவிட்டான். அந்த தீங்கை ஊரிலுள்ள பலர் அறிந்திருந்தார்கள். அந்த விசுவாசியானவனோ, அந்த வேளையிலும் அமைதலுள்ளவனாக தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு, முன்பு இருந்தது போலவே அமைதலுடன் தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். வழமையாக மற்றவர்களோடு எப்படி பேசிக் கொள்வானோ, அதே போலவே, யாவருடனும் நடந்து கொண்டான். அவனுடைய வாழ்க்கையை கண்ட ஊராரும், சக விசுவாசிகளும், அவன் சாந்தகுணமுள்ள மனுஷன் என்று மெச்சிக் கொண்டார்கள். பல ஆண்டுகளுக்கு பின்னர், அதே அயலவன், ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திலே, இந்த விசுவாசியானவனுடைய கையிலே அகப்பட்டுக் கொண்டான். அந்த சந்தர்ப்பத்திற்காக பொறுமையாக இருந்த வந்த விசுவாசியானவன், தன் குடும்ப த்திற்கு அவன் செய்த பெருந்தீங்குக்கு நிகராகவும், அதற்கு மேலாகவும் அவனுக்கு சரிக்கட்டினான். பிரியமான சகோதர சகோதரிகளே, மனிதனிலே மறைந்திருக்கும் மாம்ச சிந்தையானது சிறந்த நடிகன் அல்லது நடிகையாக இருக்கக் கூடியது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். ஒருவன் தாழ்மையாக நடந்து கொண்டு, மென்னையான தொனியிலே பேசுவதினால், அவன் சாந்தகுணமுள்ளவன் என்று கூற முடியாது. பரிசுத்த வேதாகமம் கூறும் சாந்த குணமுள்ளவன் யார்? அவன் தன் சுயபெலத்தில் தங்கி வாழாமல், ஆண்டவராகிய இயேசுவிலே இணைந்திருப்பதால், அவன் ஆவியிலே எளிமையுள்ளவனாக இருப்பான். அவன் தேவ நம்பிக்கையுள்ளவனாக ஆவியிலே எளிமையுள்ளவளாக இருப்பதினால், தன் குறை, குற்றங்களை, மீறுதல்களை குறித்து, துயரப்பட்டு, மனந்திரும்புகின்றவனாக இருப்பான். அப்படியாக வாழ்பவனின் வாழ்விலே, இக்கட்டும் நெருக்கமும் சூழ்ந்து கொண்டாலும் பிதாவாகிய தேவனின் சித்தம் தன் வாழ்விலே நிறைவேறும்படி, தேவ வார்த்தைக்கு இடம் கொடுப்பான். நன்மைக்கு கைமாறாக மனிதர்கள் அவனுக்கு தீங்கு செய்யும் போது, அவர்களுக்கு பதிலடி கொடுக்க சுயபெலமும், சந்தர்ப்பமும் வாய்தாலும், அவன் தேவனுக்கு பயந்து அவருக்காக காத்திருக்கின்றவனாக இருப்பான். இது கிறிஸ்துவையுடையவர்களுடைய இயற்கை சுபாவமாக மாற வேண்டும்.

ஜெபம்:

உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவின் சாயலிலே வளரும்படி என்னை வேறு பிரித்த தேவனே, நான் உம்முடைய வார்த்தை என்னிலே நிறைவேறும்படி மாம்சத்திற்கு எதிர்த்து நிற்கும் பெலனை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 2:12