புதிய நாளுக்குள்..

தியானம் (தை 07, 2025)

துயரப்படுகின்றவர்கள்

மத்தேயு 5:4

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.


ஒரு ஊரிலே வாழ்ந்த வந்த இரண்டு மனிதர்கள் அநேக ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்தார்கள். ஒரு நாள், நடந்த ஒரு சம்பவத்திலே அவர்களுக்கிடையிலே மனக் கசப்பு ஏற்பட்டு விட்டது. ஒருவன் மற்ற வனுக்கெதிராக குற்றம் செய்துவிட்டான். குற்றம் இழைக்கப்பட்டவன், குற்றம் செய்தவனை நோக்கி: சிநேகிதனே, எனக்கெதிராக இப்படியான காரியத்தை செய்வதற்கு உனக்கு எப்படி மனம் வந்தது என்று கேட்டான். குற்றம் செய்தவன் மறுமொழியாக: தான் செய்தது குற்றம் இல்லை என்று தன் செயலை நியாப்படுத்தினான். இந்த தகராறினாலே, பிரிவினை ஏற்படக்கூடாது என்று எண்ணி, குற்றம் இழைக்க ப்பட்டவன், அதைக் குறித்து அதி கம் அலடிக் கொள்ளலாம், காலம் வரும் போது, அதை அவன் உணர்ந்து கொள்ளுவான் என்று அப்படியே விட்டுவிட்டான். சில ஆண்டுகள் சென்ற பின்னர், குற்றம் செய்தவன், ஒரு சந்தர்பத்திலே, தன் தவறான செயலை உணர ஆரம்பித்தான். எனக்கு அநேக நன்மைகள் செய்த சிநேகிதனுக்கு இப்படியான துரோகத்தை செய்து விட்டேனே என்று துயரப்பட்டான். மனதிலே சொல்ல முடியாத துக்கம் ஏற்பட்டது. மறுநாள் காலை எழுந்ததும், தாமதிக்காமல், தன் சிநேகிதனுடைய வீட்டிற்கு சென்று, அவனை கட்டியணைத்து, அழுத வண்ணமாக, தன்னை மன் னிக்கும்படி வேண்டிக் கொண்டான். அன்றைய நாளிலே, குற்றம் செய்தவன் மனதிலே இருந்து பெரிதான பாரம் இறங்கியதை உணர்ந்து கொண்டான். அதை குறித்து அவன் மனதிலே ஆறுதல் உண்டாயிற்று. இவ்வண்ணமாகவே, தங்கள் தப்பிதங்களைக் குறித்து, மனம் வருந்தி துயரப்பட்டு, ஆண்டவர் இயேசுவை நோக்கி பார்க்கின்றவர்கள், ஆறுதல் அடைவார்கள். இந்த நிலையை ஒரு மனிதன் அடைவதற்கு அவன் ஆவியிலே எளிமையுள்ளவனாக இருக்க வேண்டும். அதாவது, தன் ஆத்தும விடுதலைக்கும், ஆவிக்குரிய வாழ்விற்கும், தன்நம்பிக்கை ஒன் றுக்கும் உதாவாது என்றும், ஆண்டவர் இயேசு இல்லாமல் வாழ முடியாது என்றும் உணர்ந்த அறிக்கை செய்கின்றவனே, தன் பாவங்களை உணர்ந்து, அதற்காக மனம்திரும்புதலுக்கேற்ற துக்க அடைகி ன்றான். சிலர் கிறிஸ்துவின் நிமித்தம் அநியாயத்தை சகித்து துயரப்படுகின்றார்கள், இன்னும் சிலர் தங்கள் பாவ நிலைமையை உணர்ந்து, மனம்திரும்பி துயரப்படுகின்றார்கள். இவர்கள் தேவனானே உண்டாகும் இளைப்பாறுதலையும், ஆறுதலையும் பெற்றுக் கொள்வார்கள்.

ஜெபம்:

ஆறுதலின் தேவனாகிய கர்த்தாவே, என் குறைகளை நான் நியா யப்படுத்தாமல், அவைகளை உணர்ந்து அறிக்கை செய்து விட்டுவிடும் உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்த்திச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 1:3