தியானம் (தை 05, 2025)
நம்பிக்கையின் அஸ்திபாரம்
மத்தேயு 19:23
ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசியானவன், தன் மாதாந்த ஊதியத்திலே தன் குடும்பத்தின் தேவைகள் சந்தித்து வந்தான். அவனுடைய உழைப்பானது, அவன் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை சந்தித்து, பிள்ளைகளின் கல்விக்கும் போதுமானதாக இருந்து வந்தது. அவனுடைய சம்பளம், அவன் தேவைகளுக்கு மட்டுமட்டாக இருந்து வந்ததால், மேலதிகமாக எதையும் செய்வதற்கு முன்னதாக, அவன் தேவனுடைய பாதத்திலே அமர்ந்து ஜெபிக்கின்றவனாக இருந்து வந்தான். தன் சபையிலுள்ள சிலரின் ஆலோசனைகளை கேட்டுக் கொண்டான். அதனால், அவன் அநாவசியமான செலவுகளை தவிர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல், வேண்டப்படாத அலுவல்களிலே சிக்கிக் கொள்ளாதபடிக்கு தன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக் கொண்டான். இந்த விசுவாசியானவன் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு தன்னை விலக்கிக் கொள்கின்றவனும், இயேசு கிறிஸ்துவை தன் நம்பிக்கையின் அஸ்திபாரமாகவும் கொண்டிலுந்தான். கால ப்போக்கிலே, அவன் பொருளாதாரம் விருத்தியடைந்து, வாழ்கையிலே வசதி ஏற்பட்ட போது, அவன் கைகளிலே மேலதிகமாக பணம் இருந்தது. அதனால், அவன் தேவைகளுக்கு மேலகதிகமாக எதையும் வாங்கிக் கொள்ளுவதற்கு முன் ஜெபிப்பதை நிறுத்தி விட்டான். தான் செய்யப்போவதை தடுத்து நிறுத்தும்படிக்கு ஆலோசனை கூறும் விசுவாசிகளோடுள்ள நெருங்கிய உறவை தணித்து விட்டான். தேவனை தன்னை ஆசீர்வதிக்கின்றார் என்ற எண்ணத்துடன், தன் இஷ்டப்படி செலவு செய்ய ஆரம்பித்தான். தன்னைப் போல வருமானமுள்ள உலகத்தார் எப்படி வாழ்கின்றார்களோ, அப்படியே தன் வாழக்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டான். படிப்பபடியாக, ஆண்டவராகிய இயேசுவில் தங்கி வாழாமல், தன் சுயத்திலே நம்பிக்கையுள்ளவனான். ஆவியிலே எளிiயுள்ளவனாக ஆண்டவர் இயேசுவிலே தங்கி வாழ்ந்த அவன், இப்போது, தன்நம்பிக்கையுள்ளவனாக மாறுவதற்கு, அவன் வாழ்விலே ஏற்பட்ட அடிப்படையான மாற்றம் என்ன? அவன் வாழ்விலே ஏற்பட்ட வசதி. அதனால்தான், 'ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்ட கமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே நம் வாழ்விலே வசதி பெருகும் போது, நாம் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஜெபம்:
பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கும் தேவனே, நான் எப்போதும் ஆவியிலே எளிமையுள்ளவனாக உம்மையே என் நம்பிக்கையாக கொண்டிருக்க என்னை கரம் பிடித்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - நீதி 30:9