தியானம் (தை 02, 2025)
நன்மையால் முடிசூட்டும் தேவன்
எபிரெயர் 12:1
நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த பெரிய பண்ணையின் முதலாளியொருவன், தன் பெலனானது குறைந்து போவதை அறிந்திருந்ததால், தன்னுடைய குமாரன் பண்ணையை முழுமையாக எடுத்து நடத்தும்படிக்கு, அவனை பற்பல காரி யங்களிலே பயிற்சிவித்து வந்தான். இதை உணர்ந்து கொள்ளாத அந்த குமாரனானவன், ஒரு நாள் தன் தகப்பனிடம் சென்று, தந்தையே, இந்தப் பண்ணையிலே நான் அநேக வருடங்களாக வேலை பார்த்து வருகின்றேன். என் இஷ்டப்படி எதையுமே செய்ய முடியவில்லை. இந்த ஆண்டிலே, என் நண்பர்களில் சிலர், புதிய வியாபாரங்களை ஆரம்பித்து, சிலரை வேலைக்கமர்த்தி, குளிரூட்டப்பட்ட அறையிலே இருந்து சுயாதீனமாக வேலை பார்கின்றார்கள். ஆனால், நானோ, இவ்வளவாய் வருதப்படுகின்றேன். இந்த ஆண்டிலே, நானும், ஒரு சிறு வியாபாரத்தை ஆரம்பித்து என் சுயாதீனத்தின்படி அதை நடத்திச் செல்ல எனக்கு, பண்ணையின் ஒரு பங்கை தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதைக் கேட்ட அவனுடைய தகப்பனானவர், தன் குமாரனின் அறியாமையைக் குறித்து மனவருத்ப்பட்டான். நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்ட பாக்கியம் பெற்ற சகோதர சகோதரிகளே, இந்த ஆண்டிலே உங்கள் திட்டம் என்ன? நீங்கள் எதை பாக்கியம் என்று எண்ணிக் கொள்கின்றீர்கள்? உங்கள் வாழ்வின் ஆசீர்வாதத்தின் வரைவிலக்கணம் என்ன? சற்று ஆண்டவர் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்து உங்கள் வாழ்க்கையை சிந்தித்துப் பாருங்கள். எந்த நாளிலே நீங்கள் ஆண்டவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றீர்களளோ, அன்றைய நாளிலிருந்து, மகிமையின் நம்பிக்கையாக ஆண்டவராகிய இயேசு உங்களில் வாசம் செய்கின்றார் என்பதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள். இந்த உலகத்தின் போக்கில் வாழும் அவிசுவாசிகள் தங்கள் வழிகளை தங்களுக்கென்று ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். சமகாலத்திலே அவை செழிப்பானவைகளாக தோன்றும். ஆனால் நீங்களோ, ஆண்டுகளை யும், காலங்களையும், உங்கள் எதிர்காலத்தை அறிந்த வரும், நன்மையை இன்னதென்று அறிந்தரும், விசுவாசத்தை தொடக்கின்றவரும் முடிக்கின்றவருமாகிய ஆண்டவர் இயேசுவை பற்றிக் கொண்டு, அவர் உங்களை நடத்திச் செல்லும்படி இடங்கொடுங்கள். காலத்திற்கு காலம் உங்கள் திட்டங்களை மாற்றிக் கொள்ளாமல், தேவன் நியமித்த ஓட் டத்திலே பொமையோடு ஓடக்கடவோம்.
ஜெபம்:
என் வாழ்விலே நன்மை இன்னதென்று அறிந்த தேவனே, நான் உலகத்தைப் பார்த்து அந்த வழியிலே போய்விடாதபடிக்கு, நீர் எனக்கு கொடுத்தவைகளை பற்றிக் கொண்டிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6