தியானம் (மார்கழி 30, 2024)
இறுதிவரை நம்மை நடத்துவார்
ஏசாயா 46:4
இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
ஒரு குடியானவன், நல்ல எதிர்காலத்தை கருதி, தான் பிறந்த ஊரை விட்டு, தூர தேசத்திலுள்ள ஊரொன்றுக்கு, தன் குடும்பத்தாரோடு, குதிரை வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்தான். ஒரு இரவிலே, அவன் வண்டிலை நிறுத்தி, அங்கே தற்காலிகமான கூடாரத்தை போட்டு அங்கே தங்கியிருந்தான். நித்திரைக்கு போகும் முன்னதாக, படுக்கையிலே இருந்து, தான் கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்த் தான். பல நாட்களாய் பயணம் செய்து கொண்டிருக்கும் அவனுடைய பாதையிலே, வெப்பம், மழை, குளிர் போன்ற சாத்தியமற்ற காலநிலைகள் ஏற்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், பெலவீனங்கள், ஆபத்துக்கள், நெருக்கடிகள், பற்பல சவால்கள் எதிர்த்து வந்தது. தாபரிக்கும் ஊருக்கு சென்றடைய இன்னும் பல நாட்கள் இருந்த போதிலும், தான் கடந்து வந்த பாதையிலே தன்னோடிருந்து, தன் பயணத்தை வாய்க்கச் செய்யும் தேவனாகிய கர்த்தருக்கு நன்றி செலுத்தினான். பிரியமான சகோதர சகோதரிகளே, இன்னுமொரு ஆண்டை இந்த உலகிலே கடந்து கொண்டிருக்கின்றோம். தேவனாகிய கர்த்தர் தாமே எப்படியாக எங்களை நடத்தி வந்தார் என்கின்ற பற்பல சாட்சிகள் ஒவ்வொருவருக்கும் உண்டு. இன்பமான, நிகழ்வுகள் உண்டு. சில கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்பட்ட நாட்கள் உண்டு. நீதியின் பாதையிலே ஜீவனம் பண்ணும் போது, நஷ்டங்களை சகித்து கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டதுண்டு. சோதனைகள், வேதனைகளின் பாதையிலே நடந்த நாட்கள் உண்டு. வெற்றியை கொண்டாடிய நாட்கள் உண்டு. அவற்றில் சில தங்களால் தங்களுக்கு வருவித்துக் கொண்டவைகள். வேறு சில மற்றவர்களால் ஏற்படுத்தப்பட்டவைகளாக இருக்கலாம். இன்னும் சில, ஏன் அப்படியாக நடைபெறுகின்றது என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால், இவை யாவற்றின் மத்தியிலும், சிலு கேள்விகள் எங்கள் மனதில் அவ்வப்போது எழுந்தாலும், நாம் தேவனிடத்தில் கொண்ட விசுவாசத்தை விட்டு தளர்ந்து போகாதபடிக்கு, அவருடைய கிருபை நம் ஒவ்வொருவரையும் பெலப்படுத்தி, தாங்கி வழிநடத்தி வருகின்றது. தாயின் கருவிலே உங்களை ஏந்தி வந்த தேவன், உங்கள் முதிர்வயதுவரைக்கும் அப்படிச் செயவார். நரைவயதுமட்டும் அவர் உங்களைத் தாங்குவார். தீமைகளை நன்மைகளாக மாற்றும் வாழ்வின் வழிகாட்டியாகிய கர்த்தரைப் போற் றுப் பாடுவோம். அவர் நடத்தி வந்த ஆச்சரியமான வழிகளுக்காக அவ ருக்கு நன்றி செலுத்துவோம்.
ஜெபம்:
தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் என்னை ஏந்தி வந்த தேவனே, இந்நாள் வரைக்கும் நீர் என் வாழ்வில் செய்து வந்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி. தொடர்ந்தும்மாய் என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 8:39