தியானம் (மார்கழி 23, 2024)
நிலையான நகரத்தை நோக்கி....
எபிரெயர் 13:14
நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.
தன்நிறைவு பொருளாதாரத்தை தேசங்கள் நாடிச் செல்கின்றது. சில தேசங்கள் அதை அடைந்து கொண்டதும், தங்கள் சாதனைகளிலே பெருமிதம் அடைகின்றார்கள். நாமும் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து, அவ்வண்ணமாக தன்நிறைவை இந்தப் பூமியிலே நாடித் தேடுவோமாக இருந்தால், நம்முடைய இருதயம் பூமியோடு ஒட்டிக் கொண்டிருக்கும். ஆசீர் வாதம் என்னும் பதத்தை பேசும் போது, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய்வதையே பெரிதான பாக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளும் சிந்தையை தரித்தவர்களாக இருங்கள். கிறிஸ்துவின் நல்ல போர் ச்சேவகன், உண்மையும் உத்தமமுமுள்ள ஊழியன், நல்ல உக்கிராணக்காரன், நல்ல ஸ்தானதிபதி, விசுவாசமுள்ள சீஷன் என்ற பதங்களை மனதிலே எப்போதும் பதிய வைத்திருங்கள். ஒருநாள் நாம் கிறிஸ்து இயேசுவின் சந்நிதானத்திலே நிற்கும் போது இந்த வார்த்தைகளால் அவர் நம்மை அழைக்கும்படிக்கு, உயிர் வாழும் நாட்களிலே, கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தன்நிறைவு பொருளாதாரம் அல்ல. மாறாக, எந்த சூழ்நிலையிலும் கிறிஸ்துவுக்குள் மனரம்யமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தின் போக்கை எதிர்த்து, வழிகாட்டியாகிய கிறிஸ்துவின் வழியிலே நடக்கும் போது, போராட்டங்களும், எதிர்ப்புக்களும், சவால்களும் தவிர்க்க முடியாதவைகள். அதே வேளை யிலே உலகத்தை ஜெயங் கொண்டவர் நம்மோடிருக்கின்றார். நமக்குள்ளே வாசம் செய்கின்றார். சுத்த மனசாட்சியிலே ஒலிக்கும் மெல்லிய சத்தத்தை கேட்டு, அந்த வார்த்தையின் வழியிலே நடவுங்கள். நம்மு டைய வாழ்வின் நோக்கம் இந்த பூமிக்குரியதல்ல, மாறாக பரலோகத்திற்குரியது. நாம் தற்போது வாழும் இடம் தற்காலிகமானது, நாம் சென்றடையும் பரம தேசமோ நிரந்தரமானது.எனவே இந்த உலகிலே குறைவுகளை சந்திக்க நேர்ந்தாலும், அவை நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் கனமகிமைக்கு நிகரானது அல்ல. ஆகையால் நீங்கள் இளைப்புடையவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட விபரீதங்களைச் சகித்த, நம் வாழ்வில் வந்த வழிகாட்டியாகிய ஆண்டவராகிய இயேசு வையே நினைத்துக் கொள்ளுங்கள். அவர் காட்டிச் சென்ற வழியையே பின்பற்றுங்கள்.
ஜெபம்:
அன்பின் தேவனே, இந்த உலகிலே தன்நிறைவை நாடி ஓடி வாழ்வின் நிம்மதியை கெடுத்துப் போடாமல், நித்தியமானவைகளை பற்றிக் கொள்ளும்படி, ஒரு நல்ல போர்ச்சேவகனாய் வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:21