தியானம் (மார்கழி 19, 2024)
வறட்சிக் காலங்களில் போஷிக்கின்றவர்
1 இராஜாக்கள் 17:5
கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.
தீர்க்கதரிசியாகிய எலியாவின் நாட்களிலே, வறட்சியும் பஞ்சமும் முன்னறிவிக்கப்பட்ட போது, கர்த்தர் எலியாவை கேரீத் என்னும் ஆற்றண் டையிலே இருக்கும்படியும், நீ அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய் என்றும், அங்கே உன்னைப் போஷpக்க காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றும் கூறினார். காகங்கள் மனிதர்களுக்கு ஆகாரம் கொண்டு வருவதென்பது, ஒரு சாத்தியமான செயல் அல்ல. அப்படியிருந்தும் எலியாவோ, கர்த்தருடைய வார்த்தையின்படி அவர் குறித்த ஆற்றங்கரையிலே தங்கியிருந்தான். கர்த்தர் குறித்த பிரகாரமாக, காகங்கள் அவனுக்கு காலையிலும், மாலையிலும் அப்பமும் இறைச்சியும், கொண்டு வந்தது. கர்த்தர் கூறிய பிரகாரமாக அவன் தன் தாகத்தைத் தீர்க்க அந்த ஆற்றின் தண்ணீரைத் குடித்தான். கிறிஸ்து வுக்குள் அருமையான சகோதர சகோதரிகளே, ஒருவேளை நீங்கள் வறட்சியினால் ஏற்படும் பஞ்சமான நாட்களை உங்கள் வாழ்நாட்களிலே சந்திக்காதிருக்கலாம். உங்களில் சிலர் யுத்த நாட்களினால் ஏற்படும் பஞ்சத்தை அனுபவித்திருக்கலாம். அத்தகைய நாட்களிலே, சில மனி தர்களிடம் பணம் தராளமாக இருந்திருக்கலாம். ஆனால், அந்தப் பணமானது யாரையும் போஷிக்க கூடாததாயிருந்தது. விற்கவும், கொள்ள வும் முடியாத காலங்கள் ஏற்பட்டிருந்தது. சிலர் முகாம்களிலே தங்கள் காலங்களை கழித்தார்கள். ஆனாலும், வாழ்வின் வழிகாட்டியாகிய கர்த் தரோ, வழிகளை திறந்து போஷித்தார், அற்புதங்களை நடப்பித்தார் என்ற சாட்சியை நாம் கேட்டிருக்கின்றோம். அன்று எகிப்திலிருந்து கானானுக்கு, வனாந்திர வழியாக நடத்திச் செல்லப்பட்ட தம்முடைய ஜனங்க ளுக்கு மன்னாவை பொழிந்து அவர்களை தறவாமல் போஷித்தார். தம்மண்டை வந்து, தம்முடைய போதனையை கேட்டுக் கொண்டிருந்த ஆயிரக் கணக்கான ஜனங்களை போஷிக்கும்படி ஐந்து அப்பங்களையும் இர ண்டு மீன்களையும் பலுகிப் பெருகச் செய்தார். கர்த்தருடைய வழிகள் அதிசயமானவைகள். சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டு பண்ணுகின்றவர். அவருடைய வார்த்தையை விசுவாசித்து, அதைப் பின்பற்றுகின்றவர்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. அன்று எலியாவை போஷித்த தேவன் இன்று நம்மோடு இருக்கின்றார். எனவே, அதிசய வழிகளை உண்டுபண்ணுகின்ற ஆண்டவராகிய இயேசுவை பற்றிக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள்.
ஜெபம்:
அதிசயமான வழியிலே என்னை நடத்திச் செல்லும் தேவனே, காலங்கள் உம்முடைய கரத்திலே உண்டு. அவை மாறிப்போனாலும், மாறாதவராகிய உம்மைப் பற்றிக் கொண்டு, உறுதியாய் தரித்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஏசாயா 43:16