புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 14, 2024)

அற்புதங்களை செய்யும் தேவன்

யாக்கோபு 5:15

அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்;


ஒரு கிராமத்திலே வாழ்ந்து வந்த தாயானவள், மரணத்திற்கேதுவான கடும் வியாதியுற்றிருந்ததால். அவளுடைய வீட்டின் வழியாக சென்ற இரண்டு ஊழியர்கள், அவளுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து, அவளுடைய வியாதிக்காக ஜெபம் பண்ணினார்கள். ஆண்டவராகிய இயேசுதாமே அந்த தாயானவளுக்கு பரிபூரண சுகத்தைக் கொடுத்தார். அந்த நாளிலிருந்து அந்தத் தாயானவள், தன் வாழ்வை முற்றிலும் தேவனிடம் ஒப்புக் கொடுத்து, தான் இனி மருந்தெடுப்பதில்லை என்று பிரதிஷ்டை செய்து கொண்டாள். அது அந்தத் தாயானவளுடைய விசுவாசம். அதை அவள் தன் பிள்ளைகளிடத்தில் திணிக்காமல், பிள்ளைகளுக்கு நோய்கள் வரும்போது, அவர்களை ஊர் மருத்துவரிடம் அழைத்து சென்று அவர்களுக்கு வேண்டிய மருந்துகளை பெற்றுக் கொள்வாள். அதைக் குறித்து சிலர் அவளை வினாவியபோது, அவர்களுக்கு மறுமொழியாக, பிள்ளைகள் வளர்ந்து தங்கள் அறிவுக்கு வரும் போது, தங்கள் வாழ்விலே தேவனுக்குரிய வைகளை தங்கள் மனதார செய்து கொள்வார்கள் என்று தயவாக கூறினாள். அந்த தாயானவளுடைய வாழ்விலே மருந்தெடுக்காமல் வாழ்வது என்ற தீர்மானம் மட்டுமல்ல, தேவனுக்கு பிரியமாக வாழ வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தாள். தன்னை குணமாக்கிய தேவ கிருபையை மேன்மைபாராட்டி வந்தாள் அதனிமித்தம், ஆத்துமா நோயினால் சரீரம் பாதிக்கப்படாதபடிக்கு, அவள் தனக்கெதிராக தீமை செய்தவர்களை மன்னித்து, அவர்களுக்காக ஜெபம் செய்து வந்தாள். பெருந்திண்டியினாலும், லௌகீக கவலையினாலும் தன் இருதயத்தை பாராமாக்காபடிக்கு, போதுமென்கின்ற மனதுடன், தன் குடும்ப வருவாய்க்கு ஏற்றபடி, ஆரோக்கியமுள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வந்தாள். குணசாலியான ஸ்திரியைப் போல இரட்டோடே எழுந்து தன் வீட்டிற்காக பிரயாசப்பட்டு சுறுசுறுப்பான இருந்து வந்தாள். எனவே, அவள் சரீரத்திலே இக்காலத்திற்குரிய நோய்கள் ஏற்படாமல் இருந்தது. பிரியமானவர்களே, அந்தத் தாயானவளுடைய வாழ்க்கையிலே அவள் தேவன் பேரில் கொண்ட விசுவாசத்தினால் உண்டான கனிகள் வெளிப் பட்டன. பிதாவாகிய தேவனுடைய நாமம் அவள் வழியாக மகிமைப்பட்டது. அவ்வண்ணமாகவே நம்முடைய விசுவாசமானது, நம்முடைய வாழ்விலே தேவனுக்கு பிரியமானவைகளை நடப்பிக்கும்படி வழிகாடடும் வேத வார்த்தைகளுக்கு இடங் கொடுப்போமாக.

ஜெபம்:

வார்த்தையை அனுப்பி குணமாக்கும் தேவனே, நீர் சர்வ வல்லமையுள்ளவர் என்பதை நான் அறிக்கையிடுகின்றேன். உமக்கு பிரியமான விசுவாச வாழ்க்கை வாழும்படி எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 15:30