தியானம் (மார்கழி 13, 2024)
எதைக்குறித்து மேன்மைபாரட்டுவேன்?
புலம்பல் 3:22
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
'நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே' இந்த வார்த்தையானது நம்முடைய சரீரத்திற்கு மட்டுமல்ல, நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்திற்குரியதாகும். இந்த வார்த்தையானது தனிப்பட பாவங்களுக்கும், சாபங்களுக்கும் உரியதுமட்டுமல்ல, நம்முடைய சரீரத்திலே வரும் வியாதிகளுக்கும், நம்முடைய முழுவாழ்விற்குரியதாகும். எனவே, நம்முடைய விசுவாச வாழ்விலே நாம் எதைக்குறித்து மேன்மைபாராட்ட முடியும்? நான் வியாதிகளுக்கு மருந் தெடுக்காமல் இருக்கின்றேன் என்பதையா? அல்லது தேவனானவர் இந்த பூமியிலே உண்டுபண்ணின வைத்தியர்களைக் குறித்தா? தன் விசுவாசத்திலே அகங்காரம் கொள்கின்றவன், தன் விசுவாசித்திலே மற்றவனை குற்றம் சாட்டுகின்றவன், இன்னும் தேவனுடைய கிருபையை அறியவேண்டிய பிரகாரமாக அறியாதிருக்கின்றான். நாம் தேவ கிருபையிலே பலப்படும்படிக்கு, அவருடைய சமுகத்திலே நாம் நம்மை தாழ்த்துகின்றவர்களாக இருக்க வேண்டும். ஒரு விசுவாசியானவன், விசுவாசத்திலே உறுதியாக இருக்கின்றேன் என்று அறிக்கை செய்யும் போது, அந்த விசுவாசமானது தேவனுடைய சமுகத்திலே அவருக்கு பிரியமுள்ளதாக இருந்தால், அந்த இடத்திலே விசுவாசத்தைக் குறித்த மேன்மைபாராட்டுதல்லல்ல, மாறாக, தேவ கிருபையைக் குறித்த மேன்மைபாராட்டுதலே இருக்கும். ஆண்டவராகிய இயேசு இந்த பூமியிலே வாழ்ந்த நாட்களிலே இருந்த மதத்தலைவர்கள் தங்கள் விசுவாசத்தை குறித்து அதிகதிகமாக மேன்மைபாராட்டினார்கள். அதனிமித்தம் அகங்காரம் கொண்டு, எவரைக் குறித்த விசுவாசம் அவர்களுக்கு இருக்க வேண்டுமோ, அவரைப் புறக்கணித்து, சிலுவையிலே அறைந்தார்கள். எனவே அழியாத ராஜ்யத்திற்கென்று அழைப்பை பெற்ற அருமையான விசுவாசிகளே, இன்று நீங்கள் எதைக் குறித்து மேன்மைபாராட்டுவீர்கள்? விசுவாசத்தை தொடக் கின்றவரும் முடிக்கின்றவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக கிருபையும் சத்தியமும் உண்டாயின. அவரே நம்முடைய வாழ்வின் வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கின்றார். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றுள்ளோம். எனவே, மருந்தைக் குறித்தும், மாத்திரையைக்குறித்தும் தர்க்கிப் பதை நிறுதித்து விட்டு, நான் நிர்மூலமாகாதிருக்கின்றது கர்த்தருடைய கிருபையே என்று தேவ கிருபையைக் குறித்தே மேன்மைபாராட்டுங்கள்.
ஜெபம்:
இருதயங்களை ஆராய்ந்தறிக்கின்ற தேவனே, நான் ஒருபோதும் பெருமையான உள்ளம் கொண்டிராமல், மனத்தாழ்மையோடு உம்மை பற்றிக் கொண்டிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 பேதுரு 3:18