புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 09, 2024)

எந்தக் காலத்திலும் எந்த வேளையிலும்

சங்கீதம் 119:6

நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப் போவதில்லை


'உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது' (சங்கீதம் 119:105). இந்த வேத வார்த்தையை வாசி க்கும் போது, உங்கள் மனதிலே தோன்றும் எண்ணங்கள் என்ன? இரவு நேரத்திலே, தெருவிலே மின்விளக்குகள் இல்லாத இடத்திலே நான் ஒற்றையடி பாதை வழியாக செல்லும் போது, அங்குள்ள பாம்புகள், வனவிலங்குகள் என்னை தீண்டாதபடிக்கு கர்த்தருடைய வசனம் எனக்கு வெளிச்சமாக இருக்கும் என்பது பொருளாகுமா? வேலையிடங்களிலே, கடைத் தெருக்களிலே கர்த்தர் என்னை வழிநடத்துவார் அல்லது சத்துரு எனக்கு தீங்கு செய்யும் போது, அவர் என்னை காத்துக் கொள்வார் என்பதாகுமா? சில விசுவாசிகள், இப்படியாக தேவனுடைய வசனங்களை தங்கள் வாழ்வின் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். இருள் சூழ்ந்திருக்கும் இந்த வனாந்திர வழியாகிய இந்த உலகத்தை நாம் கடந்து கொண்டிருக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் இந்தப் பூமியிலே பிறந்த நாள் முதல், கடைசி மூச்சுவரைக்கும் பல காலங்களையும், பருவங்களையும், நேரங்களையும் கடந்து செல்கின்றோம். பற்பல எதிர் பாராத சூழ்நிலைகளை எதிர்நோக்குகின்றோம். மலைபோன்ற பிரச்சனைகள், மரண இருளின் பள்ளத்தாக்குகளை கடக்குமாப்போலான அனுபவங்கள் வாழ்விலே உண்டாகின்றது. அந்த வழியிலே, பாதையிலே நாம் இடறாமல் நடந்து ஒவ்வொரு சூழ்நிலைகளையும் ஜெயிப்பதற்கு கர்த்தருடைய வசனமே நம் வாழ்வின் வழிகாட்டியாக இருக்கின்றது. ஒரு பெற்றோர் குழந்தையை பெற்று வளர்க்கின்றார்கள். அந்த குழந்தையானது பல பருவங்களை கடந்து வாலிப பிரயாயத்தை அடைகின்றது. வாலிப பிராயத்திலுள்ள பிள்ளைகளை கொண்ட பெற்றோருக்கும், அந்த வாலிப பிராயதிலுள்ள பிள்ளைகளுக்கும் வழிநடத்துதல் தேவை. வாலிப பிரயாயத்திலுள்ள பிள்ளை திருமணம் செய்து கொள்வதற்கு ஆலோசனைகளும், வழிநடத்துதலும் தேவை. இப்படியாக வாழ்க்கை வட்டத்தின் எல்லாப் பருவங்களிலும் கர்த்தருடைய வார்த்தையானது நம்முடைய வாழ்வின் பாதையின் வெளிச்சமாக இரு க்கின்றது. கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். வேதத்தின்படி நடப்பதெப்படி என்று வேதமே நமக்கு கருத்துடன் கற்றுக் கொடுக்கின்றது. அந்த வெளிச்சதிலே நடந்து, அவருடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, விசுவாசியின் நடைகள் ஸ்திரப்பட்டால் அது அவனுக்கு நலமாயிருக்கும்.

ஜெபம்:

என் வாழ்வின் வழிகாட்டியாகிய தேவனாகிய கர்த்தாவே, எக்காலத்திலும் உம்மைய நம்பி, உம்முடைய வார்த்தையின் வழியிலே நான் நடக்க எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 62:6