தியானம் (மார்கழி 07, 2024)
காரியம் எப்படிக் கைகூடும்?
புலம்பல் 3:25
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
ஆபிரகாமின் ஊழியக்காரனாகிய எலியேசர், தன் எஜமானனுக்கு தான் வாக்குக் கொடுத்தபடி, தன் எஜமானனாகிய ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு பெண்கொள்ளும்படிக்கு கானானாரியருடைய தேசத்திலிருந்து புறப்பட்டு மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து, ஊருக்கு புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே நின்று: 'என் எஜமானனாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்ப ண்ணி, என் எஜமானனாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். காரியமானது எப்படி நிச்சயப்படுத் தப்பட வேண்டும் என்பதை தன் எஜமானனாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரிடதிலே அறிக்கை செய்து கொண்டான். கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும் பொருட்டு மவுனமாயிருந்தான். கர்த்தரோ அவனுடைய எஜமானனுக்கும், அவனுக்கும், அனுக்கிரகம் செய்தார். இடமறியாத, இனமறியாத எலியேசருக்கு கர்த்தர் துணையாக நின்று, அவன் செய்ய காரியத்தை வாய்க்கச் செய்தார். அருமையான விசுவாசிகளே, ஒருவேளை ஆபிரகாம், கர்த்தரை அறியாத அந்நிய நுகத்தலே ஒரு குணசாலியான பெண்ணை தன் குமாரனுக்கு மனைவியானகக் கொண்டு, பின்பு அவளை மாற்றிவிடலாம் என்று எண்ணியிருந்தால் தவறாகுமோ? ஊரிலே இத்தனை பெண்கள் இருக்க, தன் எஜமானன் உணர்வில்லாமல், அறியாத தூர தேசத்திற்கு போகச் சொல்கின்றாரே என்று எலியேசர் கூறியிருக்கலாம். இன்று பல விசவாசிகள் மத்தியிலே, திருமண சம்பந்தமான காரியங்களிலே இப்படியான கேள்விகளும், நியாயங்களும் வெளிப்படுகின்றது. விலைமதிக்க முடியாத தன்னுடைய தூய இரத்ததினாலே தங்களை இரட்சித்த தேவனை மறுதலித்து, இந்த உலகத்தின் போக்கிலே சென்று, தேவனாகிய கர்த்தர் தங்கள் சந்ததிக்கு வைத்திருக்கும் அருமையான திட்டங்களை குலைத்துப் போடும்படி உலகத்திற்கு ஏற்ற, கல்வி, அந்தஸ்து, தராதரம், வேலை, ஆஸ்திகள் என்று பற்பல பொருத்தங்களை பார்க்கின்றார்கள். இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற கர்த்தர் மனிதனுடைய நினைவுகளை அறிந்திருக்கின்றார். நீங்களோ வழிகாட்டியாகிய கர்த்தருக்கு காத்திருங்கள். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவராகவேயிருக்கின்றார்.
ஜெபம்:
என்னை அழைத்த தேவனே, ஏன் இருதயம் விரும்பியபடியும், என் கண்களின் பார்வைக்கு ஏற்றபடியும் நான் என் வாழ்வின் காரியங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல், உம்முடைய நேரத்திற்கு காத்திருக்கும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஆதியாகமம் 24:21