தியானம் (மார்கழி 05, 2024)
தேவ சித்தம் நிறைவேற இடங் கொடுங்கள்
சங்கீதம் 139:7
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
'அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமதாக பிரசங்கி, அவர்களுடைய அக்கிரமமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷ்சுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷ்க்குப் போகிற ஒரு கப்பலைக் கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தரு டைய சமுகத்தினின்று விலகு ம்படி, அவர்களோடு தர்ஷ்சுக்குப் போகக் கப்பல் ஏறினான்.' (யோனா 1:1-2) இந்த மனுஷன் கர்த்தரை அறிந்தவன். அவன் போகும் வழியிலே கடலிலே அவனுக்கும் கப்பலிலே அவனோடிருந்தவர்களுக்கும் ஆபத்து நேரிட்டது. கப்பலில் இருந்தவர்கள் நீ யார் என்று கேட்டபோது, யோனா அதற்கு மறுமொழியாக: நான் சமுத்திரத்தையும் பூமியையும் உண்டா க்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான். இப்படியாக தேவனாகிய கர்த்தரையே தன் வழிகாட்டியாக கொண்டு, அவரிடத்தில் பயபக்தியுள்ளவனாக இருந்த யோனா, அவரு டைய சமுத்தைவிட்டு ஓடிவிடலாம் என்று எண்ணிக் கொண்டான். இன்று கர்த்தருடைய வார்த்தையானது யாவருக்கும் உண்டாகியிருக்கின்றது. வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்களே, நீங்கள் எல்லாரும் என் அண்டை வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று ஆண்டவராகிய இயேசு அழைப்பை விடுத்திருக்கின்றார். சிலர், அதை கேளாதவர்கள் போல வாழ்ந்து விடுகின்றார்கள். வேறு சிலர், அதைக் கேட்டு, துணிகரமாக அழைப்பை அசட்டை பண்ணி, அதற்கு எதிராக செயற்படுகின்றார்கள். இன்னும் சிலர், தீர்க்கதரிசியாகிய யோனாவைப் போல அவருடைய அழைப்பை ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால், சில பருவங்களிலே, சூழ்நிலைகளிலே ஆண்டவராகிய இயேசுவின் சமுக த்தைவிட்டு தப்பிச் செல்லும்படி, பல காரியங்களை நடப்பிக்க முயற்சி செய்கின்றார்கள். அதாவது, தங்கள் கொள்கைகளை தேவனுக்கேற்றவைகளாக மாற்றாமல், தேவனானவர் தங்கள் கொள்கைக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்று தவறான எண்ணங் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். பிரியமானவர்களே, நாம் நம்மை அழைத்தவருடைய சாயலிலே வளர்த்தியடைய வேண்டும். எனவே, தேவனுடைய அருமையான அழைப்பை அசட்டை செய்யாமல் வழிகாட்டும் தேவ வார்த்தைகளுக்கு இடங் கொடுப்போமாக.
ஜெபம்:
அன்பின் தேவனே, உம்முடைய வார்த்தைகள் என் சுய கொள் கைகளுக்குள் உட்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணங் கொள்ளாமல், எல்லா சூழ்நிலையிலும் வார்த்தையின் வழியிலே நடக்க எனக்கு கிருபை செய்வீராக இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 25:4