புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 30, 2024)

உத்தம ஊழியர்கள் யார்?

2 கொரிந்தியர் 10:4

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த சன்மாரக்கனான எஜமானனொருவன், தன் வீட்டு வேலைகளை கவனிப்பதற்காக ஒரு உழியனை வேலைக்கமர்த்தினான். அந்த ஊழியனும், தன் எஜமானனை கனப்படுத்த வேண்டும் என்ற மனதுடன், அவரை கண்டதும் எழுந்து நிற்பான். அவர் நடுச்சாமத்திலே வீடு திரும்பினாலும், அவர் வரும்வரை இரவுணவை உண் ணாதிருப்பான். எஜனமானனை குறித்து யாரும் தவறாக பேசினால், அவர்களைக் கடுமையாக கடிந்து கொண்டு சண்டைக்கு ஆயத்தமுள்ளவனாக இருந்தான். இப்படியான பல காரியங்க ளை அவன் கருத்தோடு செய்து வந் தான். ஒருநாள் அவனுடைய எஜமான னானவன், அந்த ஊழியனை அழைத்து, அவனை நோக்கி: நீ என்னை கனப்ப டுத் வேண்டும் என்று அநேக காரியங் களை செய்து வருகின்றாய். ஆனால், நான் உனக்கு கொடுத்த அநேக வேலைகளோ செய்யப்படாமல் இருக்கின்றது. சிலவற்றை நீ பின் போட்டிருக்கின்றாய். நான் உன்னிடத்தில் கொடுத்த வேலைகளை நிறை வேற்ற வேண்டும் என்பதற்காக அல்லவா உன்னை வேலைக்கு அமர்த்தினேன். நான் சொல்வதை நீ செய்யாமல், நீ விரும்பியதை செய்வதினாலே, நீ என் வார்த்தையை கனவீனப்படுத்துகின்றாயே என்று அவனை அவர் கடிந்து கொண்டார். ஆம், பிரியமானவர்களே, அந்த எஜமானனைப் போல, நம்முடைய ஆண்டவராகிய இயேசுவும், நம்மை உண் மையுள்ளவர்கள் என்று கருதி, நம்மிடத்திலே பொறுப்புக்களை கொடுத்திருக்கின்றார். அவர் சொன்ன இலகுவான காரியங்களை செய்யாமல், நம்முடைய சரீரத்தை ஒடுக்குவதால் என்ன பலன்? ஒரு விசுவாசியா னவனுக்கு வேதத்தை வாசித்து, தியானிக்க நேரமில்லை. ஆனால், ஆண்டவர் இயேசுவை பற்றி யாரும் குறை கூறினால், அவர்களோடு சண்டை செய்ய எப்போதும் ஆயத்தமுள்ளவனாக இருப்பான். இது மாம்சத்திலே உண்டாகும் கிரியைகள். நம்முடைய போராயுதங்கள் மாம்ச பெலன் அல்ல என்பதை அறிந்திருந்தால், துன்மார்க்கர் தங்கள் அறியாமையிலே சண்டைகளை ஆரம்பிக்கும் போது, நாம் அதை ஜெபத்திலே தரித்து வெற்றி சிறக்கின்றவர்களாக மாறவேண்டும். இது தேவனுக்கு பிரியமான கிரியை. எனவே, வேறு பிரிக்கப்பட்ட ஜனங்களாகிய நாம், விசுவாசத்திலே நிலைத்திருந்து, இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற கிரியைகளை எப்போதும் நடப்பிப்போமாக.

ஜெபம்:

பிதாவின் சித்தத்தை செய்யும்படிக்கு என்னை வேறு பிரித்த தேவனே, நான் மறுபடியும், எனக்கு பிரியமானவைகளை செய்யாதபடிக்கு, உமக்கு பிரியமானவற்றை நிறைவேற்ற என்னை வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:5