புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 29, 2024)

தேவனுக்கேற்ற கிரியைகள்

ரோமர் 8:35

உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதி யிருக்கிறபடி நேரிட்டாலும்,


ஒரு கிராமத்திலே வசித்து வந்த ஊழியரை சந்திக்கும்படிக்கு, தூரத்திலுள்ள பட்டணத்தில் வசித்து வந்த விசுவாசியானவனொருவன் சென்றிருந்தான். அந்நாட்கள் கடும் வெப்பமும், காங்கையுமுள்ள நாட்களாக இருந்தது. அங்கு சென்று உழியரை கண்டபோது, அவருடைய அறையிலுள்ள மின்விசிரியானது, அதனிடத்திலிருந்து கழற்றப்பட்டிருந்தது. அந்த கடும் வெப்பத்திலும், அவர், இப்படியாக தன்னை ஒறுத்து வாழ் கின்றார் என்று சபையிலும் ஊரி லுமுள்ள பலர் பெருமை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். விருந்தாளியாக வந்த அந்த விசுவாசியானவன், அந்த ஊழியரை சில தசாப்தங்களாக அறிந்திருந்தபடியால், அவரை நோக்கி, இந்த மின்விசிறியின் தார்பரியம் என்ன? இப்படியான வெக்கையான நாட்க ளிலும் மின்விசிறியில்லாமல் யாரையும் திருப்திப்படுத்த பார்க்கின்றீர்கள் என்று சுவாரசியமாக கேட்டக் கொண்டான். அந்த ஊழியர் விசுவாசியா னவனை நோக்கி: தம்பி, நான் யாரையும் திருப்திப்திப்படுத்த இதை செய்யவில்லை. மின்விசிறி பழுதடைந்து போனது உண்மைதான். என் உடல் ஆரோக்கியத்திற்கு மின்விசிறி உகந்ததல்ல என்று என் குடும்ப மருத்துவர் சொன்னபடியால், நான் அதைதிருத்தாமல் அப்படியே விட்டு விட்டேன். இதை நான் விசுவாசிகளுக்கு எடுத்துக் கூறினாலும், சிலர் அதைப் பொருட்படுத்தாமல், நான் இந்த மின்விசிறியினால் உத்தமானாகின்றேன் என்ற பிரகாரமாக பேசிக் கொள்கின்றார்கள் என்று சிரி த்தபடி கூறிக் கொண்டார். பிரியமானவர்களே, நாம் கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டு, தேவனாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கின்றோம். நாம் சிக்கனமாக வாழ்வது நல்லது. ஆனால், படுத்துறங்குவதற்கு மெத்தை இருக்கும் போது, அதைவிட்டு இறங்கி, கல்லின்மேல் படுத்துறங்குவதால் தேவனுடைய பார்வையிலே அதிக நீதிமான்களாக முடியாது. நாம் செய்ய வேண்டிய கிரியைகள் உண்டு. அவை தேவனுக்குரியவைகள். அவருடைய நல்ல போர்ச்சேவகர்களாய், அவருடைய வார்த்தையின்படி, அவருடைய சித்தத்தை நிறைவேற்றும் பாதையிலே, ஒருவேளை கல்லின்மேல் படுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அவருடைய நாமத்தினிமித்தம் பாடுகளையும் உபத்திரவங்க ளையும் சகித்துக் கொண்டு, கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை எதுவுமே பிரிக்க முடியாது என்ற நிச்சயத்தோடு, விசுவாசதிலே உறுதியாய் நிலைத்திருப்போமாக.

ஜெபம்:

அன்பின் தேவனே, உம்முடைய வார்த்தையின்படி, உமக்கேற்ற கிரியைகளை மனத்தாழ்மையோடும், கீழ்படிவோடும் நான் செய்யும்படிக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 11:33-40