தியானம் (கார்த்திகை 28, 2024)
'சடங்காச்சாரங்கள்'
கலாத்தியர் 3:26
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
ஆதி அப்போஸ்தலர்களின் நாட்களிலே கலாத்தியாவிலே இருந்த விசுவாசிகள் யூதரல்லாத புறஜாதிகளாக இருந்து தேவ கிருபையினாலே, மீட்பர் இயேசுசின்மேல் கொண்ட விசுவாசித்தினாலே இரடசிப்பை பெற்றுக் கொண்டார்கள். நாட்கள் கடந்து சென்றதும், யூதமார்க்கத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட சிலர் அவர்களிடத்தில் வந்து, இரட்சிப்பு நிறைவேறும்படி யூதருடைய நியாயப்பிரமாண கிரியைகளையும் நடப்பிக்க வேண்டும் என்று கலாத்தியாவிலுள்ள விசுவாசிகளை தங்கள் பழைய மார்க்க வழிபாடுகளுக்கு உட்படுத்திவிட்டார்கள். முக்கியமாக, கிறிஸ்துவை அறிந்த பின்னரும் ஆண்கள் சரீரத்திலே விருத்தசேதனம் செய்ய வேண்டும். அதனாலேயே நீதிமான்களாக வாழ முடியும் என்று அவர் களுக்கு தவறான உபதேசங்களை கற்பித்து வந்தார்கள். அதனால், கலாத்தி சபையோர் விசுவாசத்தைவிட்டு வழுவிப்போகும் நிலைமைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதை அறிந்து அப்போஸ்தலராகிய பவுல், கலாத்தியா சபைக்கு கூறியதாவது: புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற் போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப் படுத்தப்பட்டிருந்தாரே. ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத் தனை புத்தியீனரா? இத்தனை பாடுகளையும் வீணாய்ப்பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே. அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்? அப்படியே ஆபிரகாம் தேவனை விசு வாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று விசுவாசத்தைவிட்டு சீக்கரமாக மதச் சடங்காச்சார கிரியைகளுக்க திரும்பிய அவர்களை கடிந்து கொண்டார். பிரியமானவர்களே, விசுவாசமில்லாமல் ஒருவனும் தேவனுக்கு பிரியமாக இருக்க முடியாது. எனவே, வஞ்சிக்கும் உபதேசங்களுக்கு இடங் கொடுத்து, விட்டுவந்த சடங்காச்சாரங்களை மறுபடியும் பின்பற்றாதபடிக்கு மிகவும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.
ஜெபம்:
கிருபையினால் என்னை இரட்சித்த என்னை நீதிமானாக்கிய தேவனே, நான் உம்முடைய வசனத்தின்படி நீதிமானுக்குரிய கிரியைகளை நடப்பிக்கும்படிக்கு என் மனக்கண்கள் எப்போதும் பிரகாசமுள்ளதாக இருப்பதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதிமொழிகள் 20:9