புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 26, 2024)

பொறுப்புகளும் கடமைகளும்

1 தீமோத்தேயு 5:8

ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.


பிரியமானவர்களே, இந்நாட்களிலே நாம் தொடச்சியாக, விசுவாசத்திலே நிலைத்திருப்பதின் அவசியத்தையும், விசுவாசத்தில் இருந்து வழுவிப் போனவர்களின் வாழ்க்கையிலே இருக்கும் அறிகுறிகள் அல்லது அடையாளங்கள் என்ன என்பதைக் குறித்தும் வேத வார்த்தைகளின்படி ஆராய்ந்து தியானித்து வருகின்றோம். முக்கியமாக, முதலாவதாக நாம் விசுவாசத்தைவிட்டு வழுவிப் போகாதபடி மிகவும் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். விசுவாசிகள் என்று பெயர் பெற்ற சில தகப்பன்மார், தங்கள் சொந்த குடும்பத்தை விசாரிக்காமல், தங்களுடைய ஊதியத்திலே குடித்து, வெறிக்கின்றவர்களாவும், மனைவி பிள்ளகைளை அடிக்கின்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள். அதுபோல, சில பெற்றோர், தங்கள் வாழ்க்கையில் பல தியாகங்களை செய்து தங்கள் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகின்றார்கள். பிள்ளைகள் வளர்ந்து, படித்து, கைநிறைய உழைக்கும் காலம் வரும் போது, தங்கள் பெற்றோரை கவனிக்காமல், நாட்டின் வழக்கப்படி, தங்கள் வாழ்க்கையை தாங்கள் கவனித்தால் போதும் என்று எண்ணி, பெற்றோரை அவர்களுடைய முதிர் வயதிலே தள்ளிவிடுகின்றார்கள். ஆம், விசுவாசிகள் என்ற பெயர் பெற்றவர்கள் பல காரணங்களை முன்வைத்து இப்படியாக நடந்து கொள்கின்றார்கள். ஆனால், உலகத்திலே அவிசுவாசிகளாக இருக்கின்றன்வர்களில் சிலர், தங்கள் தாய்தந்தையரை கடைசி மூச்சுவரைக்கும் நன்றாக கவனிக்கின்றார்கள். அவிசுவாசிகளாகிய பெற்றோரில் பலர், தங்கள் பிள்ளைகளை கருத்தோடு வளர்க்கின்றார்கள். நான் ஆண்டவர் இயேசுவை அறிந்தவன், இரட்சிக்கப்பட்டவன், தேவ பயம் உள்ளவன் என்று ஒருவன் தன்னைக் உல கத்திற்கு காண்பித்துக் கொண்டு, தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அப்படிப்பட்டவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான் என்று வேதத்திலே வாசிக்கின்றோம். ஒருவேளை பெற்றோர் கடினமுள்ளவர்களாக இருக்கலாம், மனைவி பிள்ளைகள் சொற் கேட்கா தவர்களாக இருக்கலாம். ஒரு விசவாசியானவன் தன் சிலுவையை எடுத்துக் கொண்டு, ஆண்டவராகிய இயேசுவை பின்பற்றி செல்ல வேண்டும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, என் குடும்பத்தின் கடமைகள் பொறுப்புக் களையும் மறந்து விசுவாசத்திலிருந்து வழுவிப்போய்விடாதபடிக்கு, எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:4-6