புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 23, 2024)

மனச்சாட்சியிலே சூடுண்டவர்கள்

1 தீமோத்தேயு 4:1

ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே...


இந்த பூமியிலே வாழும் நமக்கு கடமைகளும், பொறுப்புக்களும் உண்டு. அவைகளை நாம் பிள்ளைகளுடைய விருப்பப்படியோ, குடும்த்தினர், உறவுகள், நண்பர்கள் விருப்பப்படியோ நிறைவேற்றாமல், பிதாவாகிய தேவனுடைய சித்தப்படி நிறைவேற்றும் போது, நம்முடைய வாழ்விலும், மற்றவர்களுடைய வாழ்விலும் நன்மை உண்டாகின்றது. சுய விருப்பப்படியும், குடும்பம், உறவுகள், நண்பர்கள், சக வேலையாட்களின் விருப்பபடியும் வாழ ஆரம்பிக்கும் விசுவாசியானவன், விசுவாசத்தைவிட்டு வஞ்சிக்கப்பட்டு போவதற்கு தனக்குதானே கண்ணி வைக்கின்றவனாக மாறிவிடுகின்றான். 'ஆகிலும், ஆவியானவர் வெளி ப்படையாய் சொல்லுகிறபடி, பிற்காலங்க ளிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவி கொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்' என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு எச்சரிப்பை வழங்கியிருக்கின்றது. நம்மில் ஒருவரும் மனச்சாட்சியிலே சூடுண்டு பொய்யர்களாக மாறிவிடதாபடிக்கு மிகவும் எச்சரிக்கையுள்ளர்களாக இருக்க வேண்டும். இரட்சிப்பின் ஆரம்ப நாட்களிலே தேவன்தாமே நமக்கு உணர்வுள்ள நல்ல மனசாட்சியை கொடுக்கின்றார். எடுத்துக்காட்டாக, விசுவாசிகளாக இருக்கின்ற போதிலும், சந்தர்பத்திற்கு தப்பித்துக் கொள்ளும்படிக்கு, தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல், கணவனை பாதுகாக்க மனைவி, மனைவியை பாதுகாக்க கணவன், பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோர், பெற்றோரை பாதுகாக்க பிள்ளைகள் சிறிய பொய்களை சொல்ல ஆரம்பிக்கின்றார்கள். பாதிப்பில்லாத பொய்களை சொன்னால் என்ன என்ற பிரகாரமாக எண்ணிக் கொள்கின்றார்கள். அப்படியாக நல் மனசாட்சியானது உணர்த்தும் போது, சத்தியத்திற்கு விரோதமாக, பொய்யை தொடர்ந்து பேசும் போது, அவை பொய் என்கின்ற உணர்வானது மனச்சாட்சியிலே அற்றிப் போய்விடும் நிலை உண்டாகி விடுகின்றது. அதன்பின்னர், ஆவியானவரின் சத்தம் இன்னதென்பதை உணர்ந்து கொள்ள முடியாத நிலைக்கு விசுவாசிகள் தள்ளப்பட்டு போய்விடுகின்றார்கள். அது ஒரு பரிதாபகரமான நிலை. மனச்சாட்சி சூடுண்ட நிலைமை. எனவே அந்த நிலைமைக்கு போய்விடாதபடிக்கு வேத வார்த்தையின் வெளிச்சத்திலே ஒவ்வொரு விசுவாசியும் தன் வாழ்க்கையை அனுதினும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஜெபம்:

உணர்வுள்ள சுத்த மனச்சாட்சியை எனக்கு தந்த தேவனே, அற்ப காரியங்களிலே என்னை நீதிமானாக காண்பிக்கும்படி என் மனசாட்சியை உணர்வற்றுப் போக பண்ணாதபடிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 3:15