தியானம் (கார்த்திகை 19, 2024)
      உலக ஞானமும் தெய்வீக ஞானமும்
              
      
      
        1 கொரிந்தியர் 1:21
        பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
       
      
      
        அப்பா, நீங்கள் அக்காலத்திலே பட்டணத்தில் படித்து பட்டம் பெற்று, பின்னர் இங்கே வந்து உங்கள் வாழ்க்கையை ஒழுங்காக வாழ்ந்து, நீங்கள் கையிட்டு செய்த காரியங்களிலே வெற்றிபெற்றது உண்மை. ஆனால், இது ஒரு சிறிய கிராமம். உலகத்திலே நாகரீகம் நிறைந்த மகா பெரிய நகரங்கள் உண்டு. உங்கள் கொள்கை கோட்பாடுகள் ஒன்றும் அங்கே செல்லுபடியாகாது. கற்றுக் கொள்ளுவதற்கு அநேக காரியங்கள் உண்டு என்று கலாநிதி பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட மகனானவன், தன் தகப்பனானவரிடம் கூறினான். அதற்கு தகப்பனா னவர்: மகனே, நான் சொல்வதை கவனமாக கேள். என்னுடைய பட்டமும் படிப்பும் எனக்கு வெற்றியைத் தரவில்லை. உலக கல்வி ஏதும் இல்லாத என்னுடைய தந்தையா னர் எனக்கு கற்றுத் கொடுத்தபடி, என் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிருந்தேன். அவர் என் காரியங்களை வாய்க்கச்; செய்தார். கர்த்தர் அன்றும் இன்றும் என்றும் மாறாதவர். யாரும் அறியாத குக்கிராமமாக இருந்தாலும், வானபரியந்தம் உயர்த்த ப்பட்ட மகா பெரிய நகரமாக இருந்தாலும், கர்த்தரையல்லாமல் சமாதானம் தரும் வெற்றி வாழ்வு இல்லை என்பதை நீ மறந்து போய் விடாதே என்று தன் தந்தையானவர் தனக்கு கூறியது போல தன் மகனானவனுக்கு தயவாக ஆலோசனை கூறினார். ஆம், பிரியமான சகோ தர சகோதரிகளே, இந்த உலகத்தில் ஞானம் என்று பெயர் பெற்றிருப்பவைகள், விசுவாசிகளை விசுவாசத்தினின்று வழுவிப்போக பண்ணிவிடும். ஆதலால், எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். 'சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.  அந்தப் படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுல கத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று. எனவே, உலக ஞானத்தில் அல்ல விசுவாசத்திலே நிலைத்திருங்கள்.
      
      
      
            ஜெபம்: 
            சகலமும் அறிந்த தேவனே, இந்த உலக்திலே ஞானம் என்று பெயர் பெற்றவைகளால் நான் இழுப்புண்டு என் விசுவாசத்தினின்று வழுவிப்போய்விடாதபடிக்கு என்னை பெலப்படுத்தி வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
      
 
      
              மாலைத் தியானம் - நீதிமொழிகள் 1:7