தியானம் (கார்த்திகை 18, 2024)
எல்லாத் தீமைக்கும் வேர்
1 தீமோத்தேயு 6:10
சிலர் அதை இச்சித்து, விசு வாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சமயம், தலைவன் ஒருவன் ஆண்டவர் இயேசுவை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: விபச்சாரஞ் செய்யா திருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அந்த தலைவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டா னவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலு வையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, பாருங்கள், அந்த தலைவனானவன், சிறு வயதிலிருந்து கற்பனைகள் யாவையும் கைகொண்டு வந்தான். ஆனாலும், அவன் தேவன்மேல் விசுவாசம் வைக்கக்கூடாதபடிக்கு, பொருளாசையானது அவனுக்குள் இருந்தது. தன்னை அழைக்கின்றவர் இன்னார் என்றும், அந்த அழைப்பின் மேன்மை எப்படிப்பட்டது என்றும் உணர்ந்து கொள்ளாத படிக்கு அவன் இருதயம் உலக ஐசுவரியத்தின் ஆசையினாலே கட்டப்பட்டிருந்தது. ஆதி அப்போஸ்தலரின் நாட்களிலும் பொருளாசையினால், இழுப்புண்டு, அநேகர் தங்கள் விசுவாச கப்பலை சேதப்படுத்தினார்கள். இன்றும் அத்தகைய உபதேசங்களை சிலர் பின்பற்றி, தாங்கள் அதற்குள் அகப்பட்டதை உணராமலும், தங்கள் சுய இலாபத்திற்காக தங்களோடு அநேகரை வசப்படுத்திக் கொள்ளும்படி உலக ஐசுவரியம் தேவனால் உண்டான பொக்கிஷம் என்று உபதேசிக்கின்றார்கள். ஆனால் நீங்களோ, 'அந்த உபதேசத்திற்கு செவி கொடுக்காமல், நன்மை செய்யவும், நற் கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் உங்களுக்கு நல்ல ஆதாரத் தைப் பொக்கிஷமாக வைத்துக் கொள்ளும்படி நாடுங்கள்.
ஜெபம்:
மேலானவைகளை தேடும்படி என்னை அழைத்த தேவனே, எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கின்ற பண ஆசைக்குள் நான் இழுப்புண்டு போகாதபடிக்கு, போதுமென்கின்ற மனதை தந்து என்னை வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 தீமோ 6:17-21