புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 12, 2024)

வார்த்தையிலே நிலைத்திருங்கள்

ரோமர் 10:17

ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும்,


எப்படியாக விசுவாசத்திலே நிலைத்திருந்து வளர்வது என்பதைக் குறித்து இந்த நாட்களிலே தியானம் செய்வோம். ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த பண்ணை உரிமையாளரொருவருக்கு இரண்டு குமாரர்கள் இருந் தார்கள். மூத்தவன் தன் தந்தையாருக்கு உண்;மையுள்ளவனாக இருந் தான். அனுதினமும் அவர் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு, அவ ருடைய வார்த்தைகளை நம்பி, அதன்படி செயற்பட்டு வந்தான். அவனு க்கும் அவன் தந்தைக்கும் இடையி லேயுள்ள உறவு வளர்ந்து கொண்டே இருந்தது. அதனால் தன் தந்தைக்கு பிரியமுள்ள பிள்ளையும், விசுவாசமுள்ள வேலைக்காரனுமாக இருந்து வந்தான். இளையவனோ, தந்தை யாரிடமிருந்து கற்றுக் கொள்வதைவிட ஊரிலே படித்துப் பட்டம் பெற் றவர்களிடமிருந்து கற்றுக் கொள் வோம் என்று ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், புத்தகங்களிலிமி ருந்தும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான். அந்த செய்திகளையும் ஆலோ சனைகளையும் பிரசுரித்தவர்கள், தங்களை பின்பற்றும் வாடிக் கையாளர்கள் எதைக் கேட்க விரும்பினார்களோ, அவைகளையே அதி கமாக பிரசுரித்து வந்தார்கள். அவன் கற்றுக் கொண்டவைகளால் அவன் சிந்தை நிரம்பிற்று. நாளடைவிலே, இளைய குமாரனானவன், தன் தந்தையார் பேசும் வார்த்தைகளையும், ஆலோசனைகளையும் அற்பமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான். அதனால் அவனுக்கும் தந்தையாருக்கும் இடையிலான உறவு மங்கி, அவரைக்குறித்த விசு வாசம் தணிய ஆரம்பித்தது. பலவிதமான காரியங்கள் அவன் மனதிலே இருந்ததால், அவன் கவனிக்க வேண்டிய காரியங்களைவிட்டுவிட்டு, அநேக காரியங்களைக் குறித்து அலட்டிக் கொள்கின்றவனாக மாறிவி ட்டான். பிரியமானவர்களே, விசுவாசமானது வார்த்தைகளை கேட்பதினாலே உண்டாகின்றது. இந்நாட்களிலே நீங்கள் எதைக் கேட்கின்றீர்கள்? தியானத்தோடு நாளை ஆரம்பித்து, நீங்கள் செய்ய வேண்டிய உங்கள் நாளாந்த அலுவல்களை முடித்த பின்பு, எதை ஆர்வமாக எந்நேரமும் கேட்பற்கு அல்லது ஊடகங்கள் வழியாக பார்ப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றீர்கள்? அவைகளை குறித்த காரியங்களே உங்களில் பெருக ஆரம்பிக்கும். உலக காரியங்களையும் நாடித் தேடுபவனுடைய வாழ்க்கை யிலே தேவனுடைய வார்த்தையை; குறித்த சந்தேகமும், வாழ்க்கையைக் குறித்த பயமும் பெருக ஆரம்பிக்கும். தேவனுடைய வார்த்தையை அனுதினமும் ஆர்வத்துடன் கேட்பவன், ஜீவனுள்ள ஆகாரத்தை உட்கொள்வதால் அவன், விசுவாசத்திலே நிலைத்திருந்து, தேவனுக்குள் வளர்ந்து பெருகுவான்.

ஜெபம்:

அன்பின் தேவனே, இந்த உலகத்தின் காரியங்களின் என் மனம் சோர்ந்து போகாதபடிக்கு, உம்முடைய வார்த்தையை பற்றிக் கொண்டு, அதில் தியானமாக இருக்கும்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:1