தியானம் (கார்த்திகை 04, 2024)
ஆத்துமாவை உயிர்ப்பிக்கும் வேதம்
சங்கீதம் 19:7
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது;
பெற்றோரானவர்கள், தங்களுடைய மகனானவன் முதல் முறையாக பாட சாலைக்கு போகப் போகின்றான் என்பதை குறித்த மனப்பதற்றமுடைய வர்களாக இருந்தார்கள். குழந்தை நேற்று பிறந்ததைப் போல இருந்தது, ஆனால் ஆண்டுகள் சீக்கிரமாக கடந்து போய்விட்டது என்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். பாடசாலைக்கு செல்லும் முன்குறித்த நாள் வந்த போது, பெற்றோரானவர்கள், தங்களுடைய பிள்ளைக்கு வேண்டிய ஆரோக்கியமுள்ள உணவையும், குடிப்பதற்கு பான த்தைக்கு கொடுத்து, அவனுக்கு ஏற்ற ஆலோசனைகளை கொடுத்து அனுப்பினார்கள். ஆனால், அந்தப் மகனானவனுக்கோ, ஏதோ காரணத்திற்காக பெற்றோர் கொடுக்கும் உணவை முழுமையாக உண்பதற்கோ அல்லது பான த்தை முற்றாக குடிப்பதற்கோ விருப்;பமில்லை. பெற்றோரானவர்கள், நாள் தோறும் நல்ல ஆலோசனைகளை கூறி வந்தாலும், அவன் உணவை முழுமையாக உண்ணாமலும், பானத்தை முற்றுமாக பருகாமலும் இருப்பதற்கு புதிய புதிய சாட்டுப் போக்குகளை சொல்லிக் கொண்டு வந்தான். மாதங்கள் கடந்து சென்ற பின்பு, அவன் உடல் பெவீனமுற்றுப் போவதை ஆசிரியர்களும், பெற்றோரும் அவதானித்தார்கள். பெற்றோரானவர்கள், கரிசனையோடு, தங்களை மகனானவனை குடும்ப மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். சிறுபையனானவன், பெலவீனமு ற்றிருப்பதால், அவனுக்கு விற்றமின்களையும், ஊட்டச் சத்துள்ள பிரதி ஆகாரத்தையும் கொடுக்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறினார். பெற்றோர், உடனடியாக அவைகளை வாங்கி தங்கள் மகனானவனுக்கு கொடுத்தார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் வேறுபிரிக் கப்பட்டவர்களாக இருந்தாலும், உலகத்திலேயே வாழ்கின்றோம். உலகத்தார் மத்தியிலே நாம் வாழும் போது, நம்முடைய சிந்தையானது உலகத்தின் காரியங்களால் நிரப்பப்படுவதால், ஆவிக்குரிய உணவை நாம் தவிர்த்துக் கொள்ளும் போது, ஆவிக்குரிய பெலவீனங்கள் உண்டாகி விடுகின்றது. முறுமுறுப்புக்கள், சமரசங்கள், சாட்டுப் போக்கு கள் அந்தப் பெலவீனங்களின் சில அறிகுறிகளாக இருக்கும். வேத வசனமே அவற்றிலிருந்து நம்மை மறுபடியும் உயிர்பிக்கின்ற ஊட்டச் சத்தாக இருக்கின்றது. அவருடைய குறைவற்ற வேதமே, நாம் ஆதிநி லைக்கு திரும்பும்படியாக புதிய உற்சாகத்தையும், பக்திவிருத்தியையும் உண்டாகும்படி, தெய்வீக ஆலோசனைகளையும் புத்துணர்சியையும் நமக்கு கொடுக்கின்றது.
ஜெபம்:
சோர்ந்து போன வேளைகளிலே என்னைப் பெலப்படுத்தும் தேவனே, உம்முடைய ஜீவ வார்த்தைகளால் உண்டாகும் புது பெலனைத் தரித்தவனாக பெலவீனங்களை மேற்கொள்ள வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதி 3:8