புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 25, 2024)

கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்

1 கொரிந்தியர் 7:23

நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள், மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடும், அவரோடு இருந்த சீஷர்களோடும் சேர்ந்து, திருப்பணியை செய்து, அவரோடு உணவுண்ட யூதாஸ்காரியோத், தன்னுடைய ஆண்டவரை முப்பது வெள்ளிக் காசுக்கு விற்றுப் போட்டான். சர்வத்தையும் படைத்த சர்வ வல்லவரை தாபரமாக கொண்டிருப்பதற்கு பதிலாக, மத அதிகாரிகளோடு இசைந்து கொள்ள வதையும், அற்பமான உலக ஐசுவரியத்தையும் மேன்மையாக எண்ணி, அவரை திட்டமிட்டு காட்டிக் கொடுத்தான். இன்றும் கர்த்தரை அறிந்து, அவரை ஏற்றுக் கொண்ட விசுவாமாரக்கத்தாரில் சிலர், விலைமதிக்க முடியாத, தம்முடைய பரிசுத்த இர த்தினாலே தங்களை கிரயத்திற்கு கொண்ட ஆண்டவருக்கு, ஒரு கிரயத்தை வைக்கின்றார்கள். அதாவது, அவருக்கு பதிலாக, இந்த உலக பொருட்களுக்காக, ஆசை இச்சைகளுகளை தெரிந்து கொள்கின்றார்கள். இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது, ஒருவனை நேசித்து மற்றவனை வெறுத்துக் கொள்வான். உலக பொருட்களுக்கும் தேவனுக்கும் ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது என்று மலைப் பிரசங்கத்திலே ஆண்டவராகிய இயேசு கூறியபோது, யூதாஸ் அங்கே அவரோடும் மற்றய சீஷர்களோடும் இருந்தான். யூதாஸ் பரத்திலிருந்து வந்த தன் எஜமானனாகிய இயேசுவை தள்ளிவிட்டு, தனக்கென்று பொருளாசையை தன் ஆண்டவனாக்கிக் கொண்டு, தன் முடிவை தானே நிர்ணெயித்துக் கொண்டான். ஒரு எஜமானன் எப்படியோ அவனை பின்பற்றும் சீஷனும் அப்படியே இருப்பான். ஆண்டவர் இயேசுவை எஜமானன் தன் எஜமானனாக்கிக் கொண்டவன், அழியாமையை தரித்தவனாக பரலோகத்திலே நீடுழீயாய் வாழ்ந்திருப்பான். உலக பொருட்களை தன் எஜமானன் ஆக்கிக் கொண்டவன், அது அழிவை காண்பது போல, அவனும் அழிவை தனதாக்கிக் கொள்வான். பிரியமான சகோதர சகோதரிகளே, கிரயத்திற்கு கொண்ட உங்கள் ஆண்டவராகிய இயேசுவிற்கு நீங்கள் எந்த விலையை கொடுப்பீர்கள்? உலகமும் மாம்சமும் பிசாசுக்குட்பட்டிருக்கின்றது, அவற்றை ஒருவன் தன் ஆண்டவனாகிக் கொண்டால், அதுவே அவன் தன்னை மீட்ட ஆண்ட வரை விற்றுப் போடும் விலையாக இருக்கும். எனவே, கற்றவைகளில் நிலைத்திருங்கள். செழிப்பின் உபதேசத்தை தள்ளி விடுங்கள். உலக பொருளுக்கு அடிமையாகதிருங்கள். உங்கள் ஆத்துமாவை மீட்டுக் கொண்ட ஆண்டவர் இயேசுவில் நிலைத்திருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, விலைமதிக்க முடியாத இரட்சிப்பை பெற்ற நான், அழிந்து போகின்ற இந்த மாம்ச இச்சைகளுக்காக, அழியாமையை இழந்து போகாதபடிக்கு, மனப்பிரகாசமுள்ள கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 6:16

Category Tags: