புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 24, 2024)

துணிகரமான செயல்களை விட்டுவிடுங்கள்

அப்போஸ்தலர் 5:9

கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன?


அனனியாவும் அவனுடைய மனைவியாகிய சப்பீராளும், மற்றய விசுவாசிகள் செய்தது போலவே, தங்கள் காணியாட்சியை விற்றார்கள். விற்ற கிரயத்தை ஒரு பங்கை தங்ளுக்கென்று வைத்துக் கொண்டு, ஒரு பங்கை கொண்டு வந்து அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத் தார்கள். இந்த செயலை அவர்கள் செய்ய துணிந்ததைக் குறித்து அப்போஸ்தலராகிய பேதுரு அவர் களுக்கு உணர்த்தும் போது, அவ ர்கள் விழுந்து மரித்துப் போனார்கள். பிரியமானவர்களே, இந்த சம்பவமானது காணிக்கையை குறித்த விஷயமா? இல்லை. நம்மிடம் இருப்பதையெல்லாம் விற்று முழுமையாக சபையிலே கொடுக்க வேண்டுமா? இல்லை. மற்றய விசுவாசிகள் செய்கின்றவைகளை நாமும் செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டோ? இல்லை. நன்றாக கவனியுங்கள்! விசுவாசிகளாகிய திரளாக கூட்டத்தார் ஒரே இருதயமும், ஒரே மனமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும், தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை. சகலமும் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது. சபையானது பூரண கிருபையால் சூழ்ந்திருந்தது. விசுவாசிகள் மத்தியிலே அன்பும், பரிசுத்தமும் நிறைவாக இருந்தது. யாவும் ஒழுங்காகவும் கிர மமாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலே, அவர்கள் மத்தியிலிருந்த அன்பையும், பரிசுத்தத்தையும், ஐக்கியத்தையும், ஒழுங்கைளும் குலைத்துப் போடும்படி வஞ்சகத்தின் ஆவிக்கு அனனியாவும் சப்பிராளும் இடம் கொடுக்க துணிகரம் கொண்டார்கள். கொடுத்தவர்கள் யாவரும், கர்த்தர் தம்மை குறைவின்றி போஷிப்பார் என்ற நம்பிக்கையிலே உறுதியாய் இருந்தார்கள். ஆனால், இவர்களோ, கர்த்தர்மேல் சந்தேகம் உள்ளவர்களாக பணத்தின் ஒரு பகுதியை தங்களுக்கென்று எடுத்து வைத்தார்கள். அந்நாட்களிலே, விசுவாச மார்க்கத்தாருக்கு, பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள் சங்கத்தால் உபத்திரவம் உண்டாயிருந்தது. அதை அவர்கள் கர்த்தரிடம் அறிக்கையிட்டு, ஒருமனப்பட்டவர் ளாக கூடி ஜெபம் பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவர்கள் மத்தியிலே நிறைவாக இருந்தது. நற்செய்தியை தைரியமாக சொன்னார்கள். வஞ்சிக்கும் ஆவிக்கு இடம் கொடுத்த அனனினாவும் சப்பிராளும் அந்த பரிசுத்ததிற்கு முன் நிலைநிற்க முடியாமல், விழுந்து ஜீவனை விட்டார்கள். எனவே, அன்பு நிறைவாக இருக்கின்றது என்று கூறி, கர்த்தருடைய நீடிய பொறுமையை அசட்டை செய்யாதிருங்கள். தாமதித்தாலும் கணக்கு கொடுக்கும் காலம் உண்டு.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, பரிசுத்த குலைச்சலை உண்டு பண்ணும் துணிகரமான இருதயத்தை என்னைவிட்டு முற்றிலும் அகற்றி, உம்டைய சித்தத்தை நிறைவேற்றும்படி எனக்கு பெலன் தந்து என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக் 1:8