புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 17, 2024)

உங்கள் காலம் கடந்து செல்ல முன்பு...

எபேசியர் 4:17

மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.


ஆவிக்குரியவர்களாக ஆரம்பித்த சில போதகர்கள், பாதி வழியிலே கிறிஸ்துவின் உபதேசத்தைவிட்டு, கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, உலகத்திற்கேற்புடைய உபதேசங்களை சார்ந்து கொள்வதால், அவர்கள் கள்ளப் போதகர்கள் என்ற பெயரைத் தரித்துக் கொள்கின்றார்கள். அப்படியானால், ஆவிக்குரியவர்களாக ஆரம்பித்த விசுவாசிகள், பாதி வழியிலே இந்த கிறிஸ்துவின் உபதேசத்தைவிட்டு, இந்த உலக போக்கிற்கு ஏற்புடையவைகளை பற்றிக் கொண்டால், அவர்களை எப்படி அழைப்பார்கள்? அவர் களை பின்மாற்றக்காரர் என்று சொல்லிக் கொள்கின்றோம். இந்த இரண்டு சாராரையும் குறித்து சத்திய வேதம் என்ன கூறுகின்றது? 'கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.' (2 பேதுரு 20-22). பிரியமான சகோதர சகோதரிகளே, அருமையான தேவ அழைப்பை பெற்றவர்களே, பெற்ற அழைப்பின் மேன்மையை உணர்ந்து, தேவனிடமாய் சார்ந்து, அவருடைய வார்த்தையின் வெளிச்சத்திலே முன்னேறிச் செல்லுங்கள். தேவ கிருபையானது யாவரும் குணப்படும்படி அழைக்கின்றது. எனவே, பழைய வாழ்விற்கு திரும்புகின்ற எண்ணம் உங்களுக்கு வேண்டாம். அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப் போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். கெட்ட குமாரனைப் போல் தூரம் தேவனைவிட்டு தூரம் சென்றிருந்தால், தாமதமின்றி தேவனித்திற்கு திரும்புங்கள். அவர் திரும்பங் கட்ட தயை பெருத்தவராயிருக்கின்றார்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, வீணான வார்த்தைகளுக்கு செவிகொடுத்து, மோசம் போக்கும் அசுத்தங்களுக்கு திரும்பும் எண்ணத்தை என்னை விட்டு முற்றிலும் அகற்றி, தேவ ராஜ்யத்தை நாடித்தேடும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 2:9