புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 11, 2024)

அந்நிய பிணைப்புக்கள்

வெளிப்படுத்தல் 2:12

இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;


இன்றைய நாட்களிலே தேவனுடைய பிரமாணங்களையும், ஒழுங்குகளையும், பரிசுத்தமாகுதலையும் குறித்து உபதேசிக்கும் போது, தேவ உழியர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரும், அவர்களை பின்பற்றும் பெருந்தொகையானோரும், இது பழைய ஏற்பாடு, அது புதிய ஏற்பாடு என்று தேவனுடைய ஒழுங்குகளை புறக்கணித்து விடுகின்றார்கள். நம்முடைய தேவனாகிய கர்த்தர் அன்றும் இன்றும் என்றும் அன்புள்ளவராகவே இருக்கின்றார். ஆதலால்தான் ஆதியிலே ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது, அவர்களை அழித்தப் போடாமல், விடுதலைக்கு ஒரு வழியை வாக்களித்தார். அதுபோலவே அவருடைய பரிசுத்தமும், நீதியும் என்றென்றும் மாறாதவைகள். இன்று அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருங்கள் என்ற உபதேசத்தை, இன்னதென்று அறிந்திருந்தும், அதை தங்களுக்கேற்றபடி மாற்றிக் கொள்கின்றார்கள். விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை புசியாதே என்று கூறினால், தங்கள் இச்சையை நிறைவேற்றும்படி, ஜெபத்தினால் அதை பரிசுத்தமாக்குவோம் என்று தேவ ஒழுங்குளை புரட்டுகின்றார்கள். ஆண் டவராகிய இயேசுதாமே: பெர்கமு சபையோருக்கு அவர்களுடைய நிலைமையைப் பற்றி கூறும் போது, அவர்களின் விசுவாசத்தைக் குறித்து சாட்சி கொடுத்தார். ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு. விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொ ள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக்க்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன் என்றும் அவைகளில் இருந்து மனந்திரு ம்பும்படிக்கு அவர்களுக்கு எச்சரிக்கையை வழங்கினார். கிருபையின் காலத்தில் வாழும் அருமையான சகோதர சகோதரிகளே, சட்டம் இல்லை நாம் எப்படியும் வாழுவோம் என்று தவறான எண்ணங் கொள் ளாமல், தம்முடைய திருப்பணியை முடித்து பரலோகத்திற்கு திரும்பிச் சென்ற நம்முடைய ஆண்டவராகிய இயேசு சபைகளுக்கு கூறிய எச்சரிப்புக்களை தியானம் செய்து, உங்கள் வாழ்க்கையை அந்த திவ்விய எச்சரிப்பு வார்த்தைகளின் வெளிச்சத்திலே ஆராய்ந்து அறி ந்து, தேவனுக்கு பிரியமில்லாதவைகளை விட்டு விலகுங்கள்.

ஜெபம்:

சுத்தமனசாட்சியை எனக்கு தந்த தேவனே, என் மனம் உம்முடைய பரிசுத்தத்தை குறித்து உணர்வற்று, சூடுண்டு போகாதபடிக்கு, உம்முடைய ஆலோசனைகளை பற்றிகொண்டு நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:1-4