புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 24, 2024)

'அசட்டை செய்கின்றவர்கள்'

2 பேதுரு 2:9

கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர் களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.


சோதோம் கொமோராவின் பாவம் மிகவும் கொடியதாக இருந்தால், அந்த ஊரிலுள்ளவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குள்ளானார்கள். கர்த்தருடைய தூதர்கள் நீதிமானாகிய லோத்து என்னும் மனிதனை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மரும கனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்து க்கொண்டு போ. நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது. இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள். அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது. அதனால் அவர்கள் தேவ எச்சரிப்பை அசட்டை பண்ணி, லோத்துவோடுகூட போகாமல், கோபாக்கினைக்கு என்று நியமிக்கப்பட்ட அந்த ஊரிலேயே இருந்து விட்டார்கள். தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கும்படி அழைப்பை பெற்ற சகோதர சகோதரிகளே, அன்று மட்டுமல்ல, இன்றும், தேவனுடைய வார்த்தைகளை அசட்டை பண்ணம் பரியாசக்காரர்கள் நம் மத்தியிலே இருக்கின்றார்கள். அவர்கள் தேவனுடைய நீதிமான்களுக்கு சமீபமாக இருக்கின்றவர்களாகவும், இரட்சிப்பின் நற்செய்தி அறிந்தவர்களாகவும், வேறு பிரிக்கப்பட்ட வாழ்வை தினமும் கண்களாலே கண்டு கொண்டாலும், இருதயத்தில் உணர்வடையாமல், மகத்துவங்களை தூஷிக்கின்றவர்களாகவும், வாசல் படியிலே வந்திருக்கும் தேவ கோபாக்கினைiயின் எச்சரிப்பு தொனியை அசட்டை செய்து, இரட்சிப்பை துணிகரமாக தள்ளி போடுகின்றவர்களாக இருக்கின்றார்கள். விசுவாச த்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஆபிரகாம், கர்த்தரிடத்திலே அந்த ஊர்களுக்காக பரிந்துர்பேசியது போல, நாமும் இப்படிப்பட்ட நடக்கையுள்ளவர்களுக்காக வேண்டுதல் செய்ய வேண்டும். அதே வேளையிலே, தேவனுடைய நியாயத்தீர்பை குறித்து நாம் உணர்வுள் ளவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, நான் இந்த உலத்திற்கு ஒத்த வேஷம் தரியாமலும், துன்மார்கரோடு இசைந்து கொள்ளாமலும், வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கையை குறித்து உணர்வுள்ளனாக வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஆதி 19:1-14