புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 20, 2024)

குறைகளை நியாயப்படுத்தாதிருங்கள்

சங்கீதம் 145:8

கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.


ஒரு சமயம், கர்த்தர் நாத்தான் என்னும் தீர்க்தரிசியை, தாவீது ராஜாவி னிடத்தில் அனுப்பினார். தீர்க்கதரிசியானவன், ராஜாவை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே சின்ன ஆட் டுக் குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அந்த ஐசுவரியவானிடத்தின் வந்த வழிப்போக்கனை போஷpக்கும்படிக்கு, தன்னிடத்திலிருந்த ஆடுமாடுகளில் ஒன்றை பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனிடமிருந்த ஒரே ஆட்டிக்குட்டியை பிடித்து, அதை அந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவித்தான் என்றான். இந்த சம்பவத்தைக் கேட்ட தாவீது ராஜா, அந்த ஐசுவரியவான்மேல் மிகவும் கோபமூண்டனாகி, தீர்க்கதரிசியைப் பார்த்து: இந்தக் காரியத்தை செய்தவன் மரணத்திற்கு பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கின்றேன் என்றான். அவன் இரக்கமற்றவனாய் இந்தக் காரியத்தை செய்தபடியினால், அந்தக் ஆட்டுக்குட்டி காக நாலத்தனையாக திரும்பச் செலுத்த வேண்டும் என்றான். அதற்கு தீர்க்கதரிசியாக நாத்தான்வேல்: நீயே அந்த மனுஷன் என்று தாவீது ராஜா செய்த பெரிய துரோகத்தை உணர வைத்தான். காரியத்தை உணர்ந்து கொண்ட தாவீது ராஜாவோ, தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல், நான் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தேன் என்று தன்னைத் தாழ்தி, மனம் வருந்தி னான். அவன் சாகாதபடிக்கு கர்த்தர் அவன் பாவம் நீங்கச் செய்தார். சில வேளைகளிலே, சில விசுவாசிகள், தேவன் தங்களுக்கு செய்த நன்மைகளை மறந்து போய், அநியாயங்களை செய்வதற்கோ அல்லது அதற்கு உடந்தையாக இருப்பதற்கோ தங்களை ஒப்புக் கொடுத்து விடுகின்றார்கள். நாம் அப்படியான சூழ்நிலைகளிலே நம்மை சிக்க வைத்துக் கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிந்தோ அறியாமலோ அநியாயங்களை செய்தோம் என்று உணரும் தருணத்திலே, தாமதமின்றி, நிபந்தனையின்றி, நம்முடைய செல்வாக்குகளை துஷ்பிரயோகம் செய்யாதபடிக்கு, நாம் நம்மை கர்த்தருடைய பாதத்திலே ஒப்புக் கொடுக்க வேண்டும். நம்முடைய நருக்குண்ட இருதயத்தை காணும் கர்த்தர், அதை புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டு நமக்கு இரக்கஞ் செய்வார்.

ஜெபம்:

மன்னிக்கும் பரம தந்தையே, வேதனை உண்டாக்கும் வழிகளிலே அடியேன் சிக்கிக் கொள்ளாதபடிக்கு, உமக்கு முன்பாக எப்போதும் உணர்வுள்ளவனாக நடந்து கொள்ள பிரகாசமுள்ள மனக் கண்களை தந்த வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:6