தியானம் (ஆவணி 16, 2024)
நன்மைக்கு பதிலாக தீமையா?
ரோமர் 12:21
நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
'அவர்கள் என்னிடமிருந்து அநேக நன்மைகளை பெற்றவர்கள். தற்போது, தங்கள் குறைகளை மறைக்க, எனக்கு தீமை செய்கிறார்கள். நான் என்ன செய்வேன்' என்று ஒரு விசுவாசியானவன் தன் மேய்ப்பரானவரிடத்தில் தன் நோவுகளை மனவேதனையுடனும், கசப்புடனும் கூறிக் கொண்டான். பிரியமானவர்களே, இப்படியாக சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டிருக்கின்றீர்களா? நீங்கள் அறிந்தோ அறியாமலோ, நன்மைக்கு பதிலாக தீமை செய்திருக்கலாம் அல்லது நன்மை செய்து தீமையை கைமாறாக பெற்றிருக்கலாம். நீங்கள் எந்த தரப்பினராக இருந்தாலும், நீங்கள் செய்யப்போகும் காரியத்தைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். முதலாவதாக, அறிந்தோ அறியாமலோ, நன்மைக்கு தீமை செய்கின்றவர்கள், காலதாமதமின்றி, தங்களை தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்து, மனந்திரும்பி, தீமை செய்தவர்களிடம் மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். அது அவர்கள் ஆத்துமாவிற்கு நல்லது. இது கடினமான காரியம் அல்ல. அப்படி செய்யாதிருந்தால் என்ன சம்பவிக்கும்? நன்மைக்குத் தீமை செய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. (நீதி 17:13) என்று பரிசுத்த தேவதாகமம் எச்சரிப்பை வழங்குகின்றது. இரண்டாவதாக, நன்மை செய்து தீமையை கைமாறாக பெற்றவர்கள், பதிலடியாக தீமை செய்யாதபடிக்கும், தாங்கள் செய்த நன்மையின் பலனை இழந்துவிடாதபடிக்கும் தங்கள் வாழ்க்கையை காத்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்து உங்கள் இருதயத்திலே வாசம் செய்தால், அங்கே நன்மை உண்டாயிருக்கும். எக்காலத்திலும், எல்லா சூழ்நிலைகளிலும், அங்கிருந்து நற்கனிகளே வெளிப்படும். எனவே, தீமைக்கு பதிலடி கொடுப்பதை முற்றாக மறந்து விடுங்கள். கைமாறு கருதி நன்மை செய்யாமல், கர்த்தருக்கு சித்தமானால், நன்மை செய்து பாடுகளை அனுபவிப்பதே நமக்கு நலமானது. நன்மைக்கு பதிலாக தீமை செய்கின்றவன், ஏற்கனவே, தீமையை தன் வீட்டிற்குள் வரவழைத்திருக்கின்றான். தீமை அவன் வீட்டில் தங்கியிருக்கும். அவன் தீமையிலே அழிந்து போகாதபடிக்கு, அவனை சபிக்காமல், அவன் மனக்கண்கள் பிரகாசிப்பிக்கப்பட வேண்டும் என்று அவனுக்காக ஜெபம் செய்யுங்கள். பொல்லாங்கனாகிய பிசாசானவன் தீமைக்கு தகப்பனாயிருக்கின்றான். எனவே, தீமை உங்களை மேற்கொள்ளாதபடிக்கு, ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்.
ஜெபம்:
எப்போதும் நன்மை செய்கின்ற தேவனே, நான் உம்முடைய சாயலிலே வளர்ந்து பெருகும்படிக்கு, நல்லோருக்கும், தீயோருக்கும் எப்போதும் நன்மை செய்யும்படிக்கு எனக்கு பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யாக்கோபு 1:17