புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 12, 2024)

'சடங்குகள்'

யோவான் 15:6

ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்;


ஒரு ஊரிலே நடந்த திருமணத்தின் வைபவங்கள் யாவும் மிகவும் நேர்த்தியாகவும், ஒழுங்காவும், சிறப்பாகவும் நடைபெற்றது. திருமண சம்ப ந்தத்தின் ஆரம்பம் முதல், திருமண நாளின் கொண்டாட்டம், மற்றும் நாலாம் சடங்கு வரைக்கும், விசாரிப்புக்கள், விருந்தோம்பல்கள், பொருத்தம் பார்த்தல், கொண்டாட்டங்கள் யாவற்றிலும் எல்லா நீதியும் நிறைவேற்றப்பட்டது. திருமணத்தை நடத்திய பெற்றோர் மனத்திருப்தியடைந்தார்கள். ஆனால், திருமண மாகிய இளம் தம்பதிகள், தங்கள் மனங்களானது ஒருவரோடொருவர் பொருந்தவில்லை என்பதை ஆரம் பத்திலிருந்தே அறிந்து கொண்டார்கள். அதன் முடிவு என்னவாய் இருக்கும்? பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த சம்பவத்தை மையமாக வைத்து சடங்காச்சாரங்களை நிறைவேற்றுதலைக் கற்றுக் கொள்ளுங்கள். திருமணத்தின் சடங்குகள் யாவும் நேர்த்தியாகவும், ஒழுங்காவும், சிறப்பாகவும் இருந்தது. ஆனால், உண்மையிலே அங்கே திரு மணம் நடைபெறவில்லை. திருமணம் என்பது கொண்டாட்டமா? அல்லது கணவன் மனைவி ஒன்றாக இணைந்து கொள்ளுதலா? திருமணத்தில் எதை கொண்டாடுகின்றீர்கள்? சற்று சிந்தித்துப் பாருங்கள். அதாவது, கணவனும் மனைவியும் மனவிருப்பத்துடன் இணைந்து கொள்ளாமல் இருந்தால் அது உண்மையிலே திருமணமாக இருக்க முடியாது. அது போலவே, உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையானது, மதச் சடங்காச்சாரமாகாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஞானஸ் நானத்தில் ஆரம்பித்து எல்லாப் படிகளையம் கடந்து சென்று, ஆலயத்திற்கு தவறாமல் சென்று, பெருநாட்களை அனுசரித்து வருகின்ற போதிலும், ஒருவன் கிறிஸ்துவிலும், அவருடைய வார்த்தைகள் அவனிலும் நிலைத்திருக்கவில்லையென்றால் அவனுக்கு கிறிஸ்துவோடு ஐக்கியம் இல்லை. கிறிஸ்துவின் சாயலிலே வளரும் வளர்ச்சியோ அதைக் குறித்த எண்ணமோ இல்லை. முதல்படியாக, கிறிஸ்துவோடு இணைந்திருப்பதிலே ஆரம்பித்து, அந்த இணைப்பிலே தரித்திருந்து உறுதியாய் வாழ்வதற்கு நம்மை பழக்கிக் கொள்ள வேண்டும். அந்த பழக்கம் இல்லாமல், ஆலயத்திற்கு செல்வதையும், பெருநாட்களை அனுசரிப்பதையும் பழக்கமாக்கிக் கொண்டால், மேற்கூறிய திருமணத்தைப் போல, வாழ்ககை யானது ஒரு மதச் சடங்காச்சாரமாகவே இருக்கும்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, ஆரம்பம் முதல், முடிவுபரியந்தம் நான் உம்முடைய வார்த்தையில்; உறுதியாய் நிலைத்திருந்து கனிகொடுக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:105