தியானம் (ஆவணி 01, 2024)
இந்நாள்வரை காத்து வந்த தேவன்...
உபாகமம் 1:31
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.
ஒரு தகப்பனானவர், நாடுவிட்டு நாடு சென்று, பல கஷ்டங்கள் துன்பங்கள் மத்தியிலும் தன்னுடைய மகனானவனை அவனுடைய பிறந்த நாள் முதல், பல சவால்கள் மத்தியில், அநேக தியாகங்களை செய்து, தோளில் சுமந்து, பாதுகாத்து, வளர்த்து வந்தார். அவன் வளர்ந்து வாலிப பிராயத்தை அடைந்த போது, தகப்பனானவர் தன்மேல் பாராட்டிய அன்பையும், தன்னை வழிநடத்தி வந்த வழியையம் முழுமையாக உணராதவனாக இருந்தான். பல காரியங்களை புரிந்து கொள்வது அவன் வயதிற்கும் அனுபவத்திற்கும் அப்பாற்பட்ட காரியமாக இருந் தது. அவன் விபரமறியாத குழந்தையாக இருந்த போது நடந்த சம்பவங்கள் யாவையும் அவன் எப்படி அறிந்து கொள்ள முடியும்? சில வேளைகளிலே, தகப்பனானவரின் ஒரு சில தியாகங்களை பற்றி அவன் தன் தாயார் சொல்ல கேள்விப்பட்டிருக்கலாம். அதைத் தவிர தான் அறிவுக்கு வந்த நாளிலே தகப்பனானவர், தன்னை கண்டித்து தண்டித்த நாட்களே அதிகமாக ஞாபகத்தில் இருந்தது. வாலிபத்தின் நாட்களிலே, தான் எல்லாவற்றையும் அறிந்தவன், எனக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கின்றது. என்னுடைய தனிப்பட்ட காரியங்களுக்குள் யாரும் நுழைந்து விடக்கூடாது என்று எண்ணம் அவன் மனதில் உருவாக ஆரம்பித்தது. அவன் தன் தகப்பனானவரை வெளிப்படையாக எதிர்த்து நிற்காவிடினும், அவரை தன் வாழ்வின் முக்கிய காரியங்கள் என்று அவன் கருதியவற்றில், அவரை தன் வாழ்வில் நுழைய அனுமதிக்காதவனாக இருந்தான். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த உல கத்தின் பெற்றோர்கள், தங்கள் பெலவீனத்திலும் தங்கள் பிள்ளைகளை தூக்கி சுமக்கின்றார்கள். அப்படியானால், சர்வ வல்லமையுள்ள, என்றும் மாறாத, பிதாவாகி தேவன் தாமே எவ்வளவாய் நம்மை தூக்கி சுமந்து வருகின்றார் என்பதை இன்று தியானித்து பாருங்கள். ஒரு தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போல, இது வரைக்கும் நம்மை சுமந்து வந்தார். அந்த வாலிபனை போல, நாம் தேவனை நம் வாழ்வில் அனும திகாகத நாட்களும், முரட்டாட்டம் பண்ணும் நாட்களும் நமக்குண்டாயிருந்திருக்கலாம். அந்த நாட்களிலும் கூட அவர் நீடிய பொறுமையயுள்ளவராய் நம்முடைய மீறுதல்களுக்கு தக்கதாய் சரிக்கட்டாமல், ஒரு தகப்பனைப் போல மனந்திரும்புகின்ற இருதயமுள்ளவர்களை அரவணைக்கின்றார். ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, இந்நாள்வரையிலும் அவர் நம்மை காத்து வந்தார். அவருக்கு நன்றியை செலுத்துங்கள்.
ஜெபம்:
தந்தையைப் போல தோளின்மேல் சுமந்து வந்த தேவனே, நான் அறிந்த நாட்களிலும், உணர்வற்று வாழ்ந்த நாட்களிலும், எனக்கு இரக்கம் பாராட்டி காத்து வந்த தயவிற்காய் உமக்கு நன்றி செலுத்துகின்றன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 103:13