புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 25, 2024)

நாட்கள் கொடியதாவதற்கு முன்னர்...

ஏசாயா 55:6

அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.


ஒரு வாலிபனானவன், உலக சிநேகிதர்களோடு சேர்ந்து தகாத வழிகளிலே சென்று தன்னை கெடுத்துக் கொண்டிருப்பதையும், அவனுடைய தகப்பனானவர் அதைக் குறித்து அதிகமாக கரிசனை காட்டாதிருப்பதையும் கண்ட மேய்ப்பரானவர், அந்தத் தகப்பனானவரோடு அவ்வப்போது அந்த வாலிபனை நல்வழிப்படுத்துவதைக் குறித்து பேசிக் கொண்டார். அந்தப் பேச்சை நிறுத்த வேண்டும் என்று தன் மனதிலே தீர்மானித்துக் கொண்ட அந் தத் தகப்பனானவர், ஒரு நாள் மேய்ப்பரானவரை நோக்கி: ஆகாதவனான என்னை இரட்சித்தவர், ஒரு நாள் என் மகனையும் இரட்சிப்பார் என்று கூறினார். அந்த தகப்பனானவர் கூறிய கூற்று நன்மையானதும், விசு வாசத்தை அறிக்கை செய்கின்றதாகவும் காணப்பட்டது. ஆனாலும் அவ ருடைய மனநிலையானது அந்தக் கூற்றிற்குரியதாக இருக்கவில்லை. தான் நம்பும் சத்த்தியத்தை பற்றிக் கொண்டு, விசுவாசத்திற்குரிய கிரியைகளை அவர் செய்யாமல், சந்தர்ப்பத்திற்கு தப்பிக் கொள்ளவதற்காக அப்படி கூறினார். பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு தாம் வளர்ந்த ஊரிலுள்ள மக்களுடைய அவவிசுவாசத்தை கண்டபோது, 'அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்த போது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். ஆயி னும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு வித வையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை' என்று கூறினார். எனவே, 'கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயி ருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.' என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு அறிவுரை கூறுகின்றது. தேவனானவர் அன்புள்ளவர் எனவே என் வாழ்வில் காரியங்களை நடப் பிப்பார் என்று அறிக்கை செய்கின்றவன், அந்த விசுவாச அறிக்கை க்குரிய கிரியைகளை; உண்மையுள்ள மனதுடன் தன் வாழ்வில் சொல்லிலும் செயலிலும் நடப்பிக்கக் கடவன். நாட்கள் கொடியதாய் மாறுதவற்கு முன்னர், உங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். கர்த்தர் உள்ளத்திலுள்ளததை அறிந்திருக்கின்றார்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, காலத்தை தாமதிக்காமல், என் வாழ்விலே உண்டாயிருக்கும் நன்மையான நாட்களிலே உம்மைத் தேடும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 4:24-27