தியானம் (ஆடி 20, 2024)
'நயங்காட்டுதல்'
நீதிமொழிகள் 1:10
என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.
ஒரு பெற்றோரானவர், தங்களுடைய மகனானவனுக்கு சின்ன வயதிலிருந்து தேவ ஆலோசனைகளை கூறி, அவன்மேல் அன்புகூர்ந்து, அவனை தேவ பயத்தோடும், கருத்தோடும் வளர்த்து வந்தார்கள். வாலிப பிரயாத்தை அடைந்த அந்த மகனானவன், மேற்படிப்பை முடி த்து, நல்ல உத்தியோகத்திலே அமர்ந்து கொண்டான். அவன் தன் தாய் தந்தையரை மதித்து, அவர்கள் மேல் நேசமாய் இருந்த போதிலும், பாடசாலையிலும், வேலையிலும் அவன் சேர்த்துக் கொண்ட அவனுடைய சக மாணவர்கள், மற்றும் சக ஊழியர்க ளின் வாழ்வின் நோக்கங்களையும் கருத்துக்களையும் கேட்க ஆரம்பித்தான். அவற்றுள் பல அவனுக்கு புதிய நோக்குகளை கொண்டதும், மனதிற்கு ஏற்புடையதாகவும் இருந்தது. அவை தன் பெற்றோர் கூறிய ஆலோசனைகளுக்கு முரண்பட்டதாக இருந்த போதிலும், தன் பெற்றோர், நவீன உலகின் நாகரீகங்களையும், புதுப் பாணிகளையும் கற்று அறியாதவர்கள் என்று தனக்குள் கூறிக் கொண்டு, அவற்றுள் சிலவற்றை அவன் கைக்கொள்ள ஆரம்பித்தான். அவை அவனுக்கு நலமானதாகவே தோன்றிற்று. பல ஆண்டுகள் சென்று வாழ்வின் கருப்பொருளை அறியும் அறிவிலே வளர்ந்த போது, அவன் தன் பெற் றோரின் ஆலோசனைகளை அற்பமாக எண்ணியத்தைக் குறித்து மனவருந்தினான். பெற்றோரானவர்கள் இந்தஉலகத்தைவிட்டு கடந்து சென்றதால், தன் அறியாமையை குறித்து மன்னிப்பு கேட்ட வழிஇல்லை என்று மிகவும் மனவேதனை அடைந்தான். பிரியமான சகோதர சகோ தரிகளே, தேவ ஆலோசனைக்கு எதிரான நல்ல ஆலோசனைகள் எதுவுமே இல்லை. இந்த உலகிலே வாழும் நாட்களிலே, கல்வி நிலை யங்களில், வேலை இடங்களில், நண்பர்கள் உறவினர் மத்தியிலிருந்து அள்ளித் தூவப்படும் எல்லா விதைகளையும் நல்ல நிலமாகிய உங்கள் இருதயத்திலே விழுந்து வளர்வதற்கு விட்டுவிடாதிருங்கள். இந்நாட்க ளிலே, ஆண்டவர் இயேசு வழியாக இரட்சிப்பை அடையாத மனிதர்கள், நீ எங்களுடன் வா, நாங்கள் போய் பாவம் செய்வோம் என்று ஒருவ ரையும் அழைப்பதில்லை. மாறாக எங்களோடு வா இந்த உலகில் பண த்தை எப்படி பெருக்கலாம் என்று உனக்கு கற்றுத் தருவோம் என்று நயங்காட்டி அழைப்பார்கள். பாவிகள் செல்லும் வழியின் முடிவு என்ன என்பதை ஆராந்து அறிந்து கொள்ளுங்கள். உலகத்தாரின் நயங் காட்டுதலுக்கு விலகி ஓடுங்கள்.
ஜெபம்:
அன்பின் பரம தந்தையே, உம்முடைய ஆலோசனைகளை நான் தள்ளிவிடாமலும் உம்முடைய கடிந்துகொள்ளுதலை வெறுக்காமலும், அவற்றை இறுகப்பற்றிக் கொண்டு முன்னேறிச் செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-3